எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இட்லி பச்சடி.

இட்லி பச்சடி :-


தேவையானவை :- பாசிப்பருப்பு - 1கப்,  கத்திரிக்காய் - 1, உருளைக்கிழங்கு - 1 பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 6. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு. உப்பு -  1 டீஸ்பூன், புளி - 1 சுளை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1இணுக்கு, கொத்துமல்லித்தழை - சிறிது.

செய்முறை:- பாசிப்பருப்பை அரைகப் நீரில் போட்டு குக்கரில் ஒரு விசில் வைக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பெரிய வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி வெந்த பருப்போடு சேர்க்கவும். பச்சைமிளகாய்களைக் கீறிப் போட்டு  மஞ்சள்பொடி , பெருங்காயத்துண்டு சேர்த்து இன்னுமொரு முறை குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும். 

ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு புளியைக் கரைத்து வைக்கவும். குக்கர் ஆறியதும் திறந்து கரண்டியால் நன்கு மசித்து உப்புப் புளித்தண்ணீரை ஊற்றவும். கொதிக்கவிடவும். இதில் கடுகு, உளுந்து , சீரகத்தைத் தாளித்துக் கருவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் பச்சடியில் சேர்க்கவும். பெருங்காயத்தூளையும் பொடியாக அரிந்த கொத்துமல்லியையும் போட்டு நன்கு கலக்கிவிட்டு சூடான இட்லிகளோடு பரிமாறவும்.  

    

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

தக்காளித் தொக்கு

தக்காளித் தொக்கு



தேவையானவை:- தக்காளி - அரை கிலோ, நல்லெண்ணெய் - 25 கி, வரமிளகாய்த்தூள் - 25 கி, வெந்தயம், கடுகு தலா அரை டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1இணுக்கு. பெருங்காயப் பொடி - 1  சிட்டிகை.

செய்முறை:- தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.  ஒரு கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, வெந்தயம் போடவும். இரண்டும் வெடித்துச் சிவந்ததும் பெருங்காயப்பொடி, கருவேப்பிலை போட்டு தக்காளியைப் போடவும். பத்து நிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்துக் கிண்டியபின் உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிம்மில் வைத்து வேக விடவும். கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பிடித்துவிடும். விரும்பினால் கடைசியில் சிறிது சீனியோ வெல்லமோ சேர்க்கலாம். தொக்கு நன்கு வெந்து சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி சப்பாத்தி, தோசை, இட்லி, சாதத்துடன் பரிமாறவும். 

  

சனி, 8 ஆகஸ்ட், 2020

கத்திரிக்காய் திறக்கல்.

கத்திரிக்காய் திறக்கல். 


தேவையானவை:- கத்திரிக்காய் - 3, உருளைக்கிழங்கு - 1, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1,  அரைக்க :- வரமிளகாய் - 5, தேங்காய்த்துருவல் - அரை மூடி, சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 6. பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல். உப்பு - அரை டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன். ( கடுகு உளுந்து சோம்பு விரும்பினால் சிறிது ) , கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம்,தக்காளியை சுத்தம் செய்து அரை இன்ச் சதுரத் துண்டுகளாக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சோம்பு தாளித்துக் கருவேப்பிலை சேர்க்கவும்.இதில் பெரிய வெங்காயம் கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். அதன்பின் உருளைக்கிழங்கு தக்காளியைப் போட்டு சிறிது வதக்கு அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.எண்ணெயில் வதங்கி மசாலா பிரியும்போது இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். பாதி வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கி இட்லி, தோசையுடன் பரிமாறவும். 
  

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

எக் துக்டா.

எக் துக்டா.



தேவையானவை :- முட்டை 4, கடலைமாவு - 2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் -கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- முட்டையை அவித்துத் தோலுரித்து எட்டுத் துண்டுகளாக்கவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்து அதில் முட்டைத் துண்டுகளை நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடாக பச்சைமிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்.   
  

வியாழன், 30 ஜூலை, 2020

பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா.

பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா. 


தேவையானவை :- பனீர் - 200 கி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், கசூரி மேத்தி ( காய்ந்த வெந்தயக்கீரை ) - சிறிது, வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், மலாய் ( பாலாடை ) - 1 டேபிள் ஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப், உப்பு - அரை டீஸ்பூன், பட்டை, இலை - சிறிது. 

செய்முறை:- பனீரைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியாக அரைக்கவும். ஒரு பானில் பட்டை இலை அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போடவும். அதையும் சிறிது நேரம் வதக்கி சிவந்ததும் மிளகாய்த்தூள் மல்லித்தூள் தக்காளி பேஸ்டை போடவும். உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி பனீரைப் போட்டுப் பாலையும் அரை கப் தண்ணீரையும் ஊற்றவும். சிறிது கொதித்ததும் இதில் கசூரி மேத்தி கரம் மசாலா சேர்த்து இன்னும் சில நிமிடம் வேக வைக்கவும். ( தண்ணீர் போதவில்லையென்றால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். ) இறக்கும்போது மலாயையும் வெண்ணெயையும் போட்டு இறக்கி ரொட்டி, நான், சப்பாத்தி, ருமாலி ரொட்டி, குல்ச்சா, ஜீரா ரைஸுடன் பரிமாறவும். 

  
Related Posts Plugin for WordPress, Blogger...