எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

23.மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ் பிரியாணி

23.மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ் பிரியாணி


தேவையானவை:- மீல்மேக்கர் – 30, உப்பு சேர்த்து வேகவைத்த கொண்டைக்கடலை – அரை கப், பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், அரைக்க :- பச்சை மிளகாய் – 6, சோம்பு – 1 டீஸ்பூன், தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, கசகசா – அரை டீஸ்பூன், கொத்துமல்லி புதினா தழை – 1 கைப்பிடி. எண்ணெய் + வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – ஒரு டீஸ்பூன்.



செய்முறை:- மீல்மேக்கர்/ சோயா சங்கஸை வெந்நீரில் போட்டு மூடி 3 நிமிடம் கழித்து வடிகட்டி அலசிப் பிழிந்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியைக் களைந்து ஊறவைக்கவும். தேங்காய், பச்சைமிளகாய்,சோம்பு, கசகசா, முந்திரியை அரைக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெய் + வெண்ணெய் போட்டு பட்டை கிராம்பு ஏலக்காயைத் தாளிக்கவும். வெங்காயத்தை மென்மையாக வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அது சிவந்ததும் மீல்மேக்கரையும் தக்காளியையும் சேர்த்து அரைத்த மசாலாவையும் சேர்க்கவும். நன்கு திறக்கி விட்டு அரிசியைப் போட்டுக் கலக்கவும். இத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலையையும் கலக்கவும். நான்கு கப் நீரூற்றி உப்பு சேர்த்து மேலாக கொத்துமல்லி புதினாவைத் தூவி ஒரு விசில் வைத்து இறக்கவும். இத்துடன் ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், மீன் வறுவல் சேர்த்துப் பரிமாறவும்.

 

வியாழன், 2 செப்டம்பர், 2021

22.ப்ராக்கோலி பிரியாணி

22.ப்ராக்கோலி பிரியாணி


தேவையானவை:- ப்ராக்கோலி – 1, பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2, சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் , மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பிரியாணி மசாலா – 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 2 கப், உப்பு – 1 டீஸ்பூன், புதினா கொத்துமல்லி – ஒருகைப்பிடி, நெய் + எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் – அரை கப்.ப்ராக்கோலியை வறுக்க :- மைதா, கார்ன்ஃப்ளோர் – தலா 1 டேபிள் ஸ்பூன்.  உப்பு, மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன். வறுக்கத் தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:- ப்ராக்கோலியை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மைதா கார்ன்ஃப்ளோர் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசறி எண்ணெயில் வறுத்து வைக்கவும். ஒரு ப்ரஷர் குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் +எண்ணெயை ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காயைத் தாளித்து வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும், இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிவக்க வறுத்துத் தக்காளி, சோம்புத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பிரியாணி மசாலாவைச் சேர்த்து அரிசியையும் வறுத்து இரண்டு கப் தேங்காய்ப்பால் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கிளறவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும். குக்கரைத் திறந்து ப்ராக்கோலியைச் சேர்த்துக் கிளறிவிட்டு இரண்டு நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், புதினா கொத்துமல்லித்தழைகள் தூவி நவரத்ன குருமாவுடன் பரிமாறவும்.

 

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

21.முட்டை பிரியாணி

21.முட்டை பிரியாணி


தேவையானவை :- முட்டை 6, சீரகசம்பா அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, கொத்துமல்லி புதினாத்தழை – ஒருகைப்பிடி, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன். அரைக்க :- வரமிளகாய் – 6, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, பூண்டு – 8 பல், சோம்பு, சீரகம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன், கசகசா – அரை டீஸ்பூன், தேங்காய் – 1 துண்டு, உப்பு – 1டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். வறுத்த முந்திரிப் பருப்பு – 8 நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- முட்டைகளை அவித்துத் தோலுரிக்கவும். ஊசியால் லேசாக அங்கங்கே குத்தி வைக்கவும். அப்போதுதான் பிரியாணி மசாலா உள்ளே சார்ந்து ருசியாக இருக்கும். சீரகச்சம்பா அரிசியைக் களைந்து ஊறவைக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை மென்மையாக வதக்கவும். தக்காளியை போட்டுக் குழைந்ததும் மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கி அரிசியைச் சேர்க்கவும். நன்கு பிரட்டி விட்டு நான்கு கப் நீரூற்றிக் கொதிக்க விடவும். கொதித்து சாதம் முக்கால் பதம் வெந்ததும் முட்டைகளையும் புதினா கொத்துமல்லித்தழைகளையும் சேர்த்து பத்து நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். உருக்கிய நெய்யை ஊற்றி முந்திரிப் பருப்பைத் தூவி சிக்கன் விண்ட்லூ, மட்டன் குருமாவுடன் பரிமாறவும்.  

 

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

20.நாசி பிரியாணி (மலேஷியா)

20.நாசி பிரியாணி (மலேஷியா)


 

தேவையானவை :- சிக்கன் லெக் பீஸ் - 4, பாசுமதி அரிசி - 2 கப்,  யோகர்ட் - அரை கப், பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1  டீஸ்பூன், சோம்புத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை -  2, ஏலக்காய், கிராம்பு - தலா 4, அன்னாசிப்பூ - 2, சீரகம் - ஒரு  டீஸ்பூன், பந்தன் இலைகள் - 4, லெமன் கிராஸ் - 2, எவாபொரேட்டட் மில்க் - ஒரு கப், சிக்கன் ஸ்டாக் - 800 மிலி + 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், ஜாதிக்காய் - கால்பாகம் பொடிக்கவும். கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன், வறுத்த வெங்காயம் - 1 கப், வறுத்த கிஸ்மிஸ், முந்திரி - ஒரு கப், குங்குமப்பூ - 2 சிட்டிகை.

 

 

செய்முறை :- யோகர்ட்டில் மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து சிக்கன் லெக் பீஸை நன்கு பிரட்டி 3 மணிநேரம் ஊறவிடவும். ஒரு பானில் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி பாதி அளவு பட்டை, கிராம்பு ஏலக்காய் அன்னாசிப்பூ தாளித்து, பாதி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி ஊறவைத்த பாசுமதி அரிசியை வறுக்கவும். ஒரு ரைஸ் குக்கரில் அரிசியை மாற்றி அதில் பந்தன் இலைகள், லெமன் கிராஸ் தண்டு, எவாபொரேட்டட் மில்க், சிக்கன் ஸ்டாக் ஊற்றி ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். இன்னொரு பானில் மீதி தேங்காய் எண்ணெய் ஊற்றி மீதிப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ தாளித்து மீதிப் பூண்டுப் பேஸ்டைப் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், ஜாதிக்காய்ப் பொடி போட்டு வதக்கவும். இதில் ஊறவைத்த சிக்கன் லெக் பீஸ்களைப் போட்டு 2 கப் சிக்கன் ஸ்டாக் ஊற்றி வேகவிடவும். முக்கால்வாசி வெந்ததும் வறுத்த வெங்காயம், பிரிஞ்சி இலை, கொத்துமல்லி தூவி வேகவைத்து இறக்கவும்.  குங்குமப்பூவை வெந்நீரில் ஊறவைத்து பாசுமதி சாதத்தில் கலக்கவும். பாந்தன் இலைகள், லெமன் கிராஸை எடுத்து விடவும். வறுத்த வெங்காயம், கிஸ்மிஸ் முந்திரி கலந்து வைக்கவும். சர்விங் ட்ரேயில் பாசுமதி சாதத்தையும் வெந்த சிக்கன் லெக் பீஸையும் வைத்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும். 

 

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

19.காவோ மோக் காய் ( தாய் பிரியாணி)

19.காவோ மோக் காய் ( தாய் பிரியாணி)


 

தேவையானவை :- வேகவைத்த பாசுமதி அரிசி சாதம் - 3 கப், தாய் சிவப்பு மிளகாய் விழுது - 5 டேபிள் ஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 1 நசுக்கவும்., கொத்துமல்லி - அரைக்கட்டு,  உப்பு - 2 டீஸ்பூன், மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், ரெட் சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன், மீன் சாஸ் - 3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன். சிக்கன் லெக் பீஸ் - 3, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய் - 2, வெள்ளரிக்காய் - 1, புதினா - ஒரு கைப்பிடி.

 

செய்முறை :- 2 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது, ரெட் சில்லி சாஸ், கொத்துமல்லி, இஞ்சி பூண்டு, வெங்காயம், உப்பு, மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து மைய அரைக்கவும். எலுமிச்சைச் சாற்றையும் 2 டேபிள் ஸ்பூன் மீன் சாஸையும் கலந்து சிக்கன் லெக்பீஸைக் கீறிக் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சிவப்பு மிளகாயோடு சேர்த்து வதக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும். மிச்ச சிவப்பு மிளகாய் விழுதையும் மீன் சாஸையும்  அரை கப் தண்ணீர் ஊற்றி இன்னொரு பானில் எடுத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி சிக்கனில் சேர்த்து சமைத்த சாதத்தையும் பரப்பவும்.  கலக்கிய சிவப்பு மிளகாய் விழுதை இதில் பரவலாக ஊற்றி மூடிபோட்டு சிறு தணலில் 10 நிமிடம் வேக விடவும். 7 நிமிடத்துக்குப் பின் திறந்து புதினா தூவி தக்காளி கெச்சப்புடன் பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...