எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 10 அக்டோபர், 2014

குமுதம் பக்தி ஸ்பெஷலில் அம்மன் ப்ரசாதங்கள். .AMMAN PRASADHAM

1.   கும்மாயம்/ஆடிக்கூழ்:-
தேவையானவை:-
கும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.
கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்
நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.
தண்ணீர் - 4 கப்

செய்முறை:-
பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.

2.   கம்மங்கூழ் :-
தேவையானவை :-
கம்பு – 2 கப்
தண்ணீர் – 6 கப்செய்முறை :-
கம்பில் நீர் தெளித்து மிக்ஸியில்  சிறிது சிறிதாக வைப் செய்யவும். அதைக் கழுவித் தவிடு நீக்கவும். 6 கப் தண்ணீரில் வேகப்போடவும் . கொதிவந்ததும் அடக்கி வைக்கவும். கிளறிவிட்டு மூடிபோட்டு சிறுதணலில் வேகவைத்து இறக்கவும்.  வெய்யிலுக்கு இதமா இதைப் பிசைந்து உப்பு தயிர்போட்டு சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து உண்ணலாம். தொட்டு சாப்பிட மாங்காய் ஊறுகாய், மோர்மிளகாய் வற்றலும் நன்றாக இருக்கும்.

3.   தேங்காய்ப்பால் கஞ்சி:-
தேவையானவை :-
பச்சரிசி - 1 கப்
தேங்காய்ப்பால் - திக் - 1 கப்
தேங்காய்ப்பால் - தண்ணீர் கலந்தது - 2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வெள்ளைப் பூண்டு - 10 பல்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி வெந்தயம், பூண்டைச் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிழிந்த தேங்காய்ப் பால் 2 கப் ஊற்றி 3 விசில் சத்தம் வரும்வரை வைக்கவும். பிரஷர் போனதும் திறந்து நன்கு மசித்து உப்பும் முதல் தேங்காய்ப் பாலும் சேர்க்கவும்.

இதை அச்சு வெல்லம் அல்லது ஊறுகாய் அல்லது பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.


4.கோதுமைக் களி :-
தேவையானவை:-
கோதுமை மாவு – 2 கப்
அரிசி நொய் – ½ கப்
தண்ணீர் – 6 கப்
உப்பு – ½ டீஸ்பூன்

செய்முறை:-
அரிசி நொய்யைக் கழுவி 6 கப் தண்ணீரில் வேகப்போடவும். முக்கால் பதம் வெந்ததும் அதில் கோதுமை மாவை நீரில் கரைத்து ஊற்றவும். நன்கு கிளறவும். உருண்டு வெந்து வரும்போது இறக்கி உப்பு சேர்த்துக் கிளறி மூடி வைக்கவும். முருங்கைக்கீரைக்குழம்புடன் பரிமாறவும்.


5.   மோர்க்களி :-
தேவையானவை:-
அரிசி மாவு  - 2 கப்
புளித்த மோர் – ½ கப்
எண்ணெய் – ¼ கப்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு
உப்பு- ½ டீஸ்பூன்

செய்முறை :-

மோரில் உப்பு சேர்த்து அரிசி மாவைப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், பச்சைமிளகாய் கருவேப்பிலை தாளித்து மாவைச் சேர்க்கவும். தண்ணீர் தொட்டு மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் பதத்தில் இறக்கிப் பரிமாறவும்.

6.சோளக்கஞ்சி  :-
தேவையானவை:-
சோளம் – 1 கப்
தண்ணீர் – 6  கப்
உப்பு – ஒரு சிட்டிகை.
பால் – 2 கப்
ஜீனி – 1 டேபிள் ஸ்பூன்
நெய்  - 2 டீஸ்பூன்.

செய்முறை:- சோளத்தில் தண்ணீர் போட்டுப் பிசிறி சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் வைப் செய்யவும். சுளகில்/ தட்டில் போட்டு லேசாக உமிபோகப் புடைத்துத் திரும்பவும் தண்ணீர் தெளித்துப் பிசறி ஊறியதும் மிக்ஸியில் இரண்டாம் முறை லேசாக விப்பரில் போடவும். திரும்பவும் புடைத்து உமி நீக்கிக் கழுவி 6 கப் தண்ணீரில் குக்கரில் 2 விசில் வரும்வரை வேகப்போடவும். வெந்ததும் இறக்கி மசித்து உப்பு சேர்க்கவும். சாப்பிடும் சமயம் பால், ஜீனி, நெய் சேர்த்துப் பரிமாறவும்.


7.   வெள்ளை ரவைக்கஞ்சி :-
தேவையானவை :-
வெள்ளை ரவை – கால் கப்
பால் – 2 கப்
தண்ணீர் – 1 கப்
ஜீனி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை.
ஏலக்காய் – 1 சிட்டிகை
நெய் – 2 டீஸ்பூன்
கிஸ்மிஸ் – 10
பேரீச்சை – 2.

செய்முறை:-
வெள்ளை ரவையை வெறும் வாணலியில் வறுத்து ஒரு டம்ளர் கொதிக்கும் நீரைச்சேர்க்கவும். வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகை சேர்க்கவும். நன்கு கிளறி கொதிக்கும் பாலையும் ஜீனியையும் சேர்க்கவும். ஜீனி கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி தூவவும். பேரீச்சையை விதை நீக்கிப் பொடியாக அரியவும். பேரீச்சையையும் கிஸ்மிஸையும் நெய்யில் பொறித்துப் போட்டுப் பரிமாறவும்.

8.   ஓட்ஸ் காய்கறிக் கஞ்சி:-
தேவையானவை:-
ஓட்ஸ் – 1 பாக்கெட் ( 100 கி)
வெங்காயம் – சிறிது 1 – பொடியாக அரியவும்
தக்காளி – ½ பாகம் பொடியாக அரியவும்.
காரட் , பீன்ஸ் – கால் கப் பொடியாக அரியவும்.
பச்சைப் பட்டாணி – 2 டீஸ்பூன்
சீரகம் , மிளகு – பொடித்தது 1 டீஸ்பூன்
     அல்லது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் +
கரம் மசாலா தூள் – ¼ டீஸ்பூன்
ஆம்சூர்பொடி – ¼ சிட்டிகை
தண்ணீர் – 3 கப்
உப்பு – ½ டீஸ்பூன்

செய்முறை:-
தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் ஓட்ஸை வேகப் போடவும். மிளகு சீரகம் சேர்ப்பதானால் காரட் பீன்ஸ் பட்டாணி தக்காளி வெங்காயத்தை அதனுடன் வேகப்போடவும்.  வெந்ததும் கண்ணாடி போல ஒட்டாமல் வரும்போது உப்பும் மிளகு சீரகப் பொடியும் சேர்த்து  இறக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் போடுவதானால் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி வெங்காயம், காய்கறிக்கலவையை வதக்கி கரம் மசாலா பொடி, ஆம்சூர் பொடி உப்பு சேர்த்து வதக்கி கொதிக்கும் ஓட்ஸில் சேர்க்கவும். கண்ணாடி போல ஒட்டாமல் வெந்ததும் இறக்கி அப்பளம், சாஸுடன் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...