30.தநாக் (ரெயின்போ) கீமா பிரியாணி:-
தேவையானவை:- கீமா – அரை கிலோ, பாசுமதி அரிசி – 3 கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 + 4, பூண்டு - 6 பல், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், கரம் மசாலா பவுடர் – 2 டீஸ்பூன், முழு கரம் மசாலா – 2 டீஸ்பூன், முழு மல்லி – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, சீரகம் -1 ஸ்பூன், ஏலக்காய் , கிராம்பு – தலா 4, பச்சை மிளகாய் – 2, தக்காளி – 3, வானவில் செய்ய :- யெல்லோ ஃபுட் கலர் + தண்ணீர், ரெட் ஃபுட் கலர் + தக்காளி கெட்சப் , பர்ப்பிள் ஃபுட் கலர் + தண்ணீர், க்ரீன் ஃபுட்கலர் செய்ய :- பச்சை மிளகாய் – 2 புதினா கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, சீரகம் -1 டீஸ்பூன், பூண்டு – சிறிது, எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன்.
செய்முறை:- கீமாவை கழுவி குக்கரில் பெரிய வெங்காயம் ஒன்று, ஆறு பல் பூண்டு, சீரகம், அரை டீஸ்பூன் உப்பு, முழு கரம் மசாலா போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 12 நிமிடம் வேகவிடவும். இன்னொரு பானில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பு பட்டை, சீரகம், ஏலக்காய் 2, கிராம்பு 2 சேர்த்து ஊறவைத்த பாசுமதி அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து வடிக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி 4 வெங்காயத்தை நீளமாக நறுக்கிப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். இதில் மீதி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வேகவைத்த மட்டனைச் சேர்த்துக் கிளறவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், முழு மல்லி, சீரகம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி அரை கப் நீர் சேர்க்கவும். பத்து நிமிடம் சிம்மில் வேகவைத்து இறக்கவும். சாதத்தை ஐந்து பாகமாகப் பிரிக்கவும். வெள்ளை சாதத்தை அப்படியே வைக்கவும். யெல்லோ புட் கலருடன் தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு சாதத்தில் கலக்கவும். தக்காளி கெட்சப்புடன் ரெட் ஃபுட் கலரைச் சேர்த்து இன்னொரு பங்கு சாதத்தில் கலக்கவும். பர்ப்பிள் ஃபுட் கலரை நீருடன் கரைத்து இன்னொரு பங்கு சாதத்துடன் கலக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லி, சீரகம், பூண்டு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அரைத்து இன்னொரு பங்கு சாதத்தில் கலக்கவும். ஓவனை 200 டிகிரி முற்சூடு செய்யவும். ஒரு ட்ரேயில் நெய் தடவி சிவப்பு சாதத்தைப் பரப்பவும். அதன் மேல் பர்ப்பிள் சாதத்தைப் பரப்பவும். மட்டன் கைமா மசாலாவைப் பரப்பி மஞ்சள் சாதத்தைப் பரப்பவும். அதன் மேல் பச்சை நிற சாதத்தைப் பரப்பி வெள்ளை சாதத்தையும் அதன் மேல் பரப்பவும். இதை ஓவனில் வைத்து ஓவனை 80 டிகிரியில் வைத்து 3 நிமிடம் பேக் செய்யவும். வெதுவெதுப்பானதும் எடுத்து அப்படியே ஒரு ட்ரேயில் கவிழ்க்கவும். லேசாகக் கலந்து விட்டு வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரித்துண்டுகளோடு பரிமாறவும்.