எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஜூலை, 2020

சிவப்பு முள்ளங்கி சாம்பார்.

சிவப்பு முள்ளங்கி சாம்பார்.


தேவையானவை:- சிவப்பு முள்ளங்கி - 250 கி, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 1, சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு, ஒரு சிட்டிகை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை - 1 இணுக்கு, கொத்துமல்லித் தழை - சிறிது.

செய்முறை:- சிவப்பு முள்ளங்கியை நன்கு கழுவி வட்டத்துண்டுகளாக்கவும். சின்ன வெங்காயம் தக்காளியை நறுக்கு முள்ளங்கியோடு சேர்த்துப் பருப்பில் போட்டு ஒருதுண்டு பெருங்காயம், மஞ்சள் தூள் கால் கப் தண்ணீர் சேர்த்துக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். உப்பு புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி சேர்த்து வைக்கவும். குக்கரைத் திறந்து புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம், பெருங்காயம் கருவேப்பிலை தாளித்துக் கொத்துமல்லி தூவி இறக்கவும். சாதம் தோசை இட்லி  போன்றவற்றோடு பரிமாறவும்.
  

கேப்பைப் புட்டு/ராகிப் புட்டு.

கேப்பைப் புட்டு.

தேவையானவை:- கேப்பை ( ராகி ) மாவு -1 கப் ( வீட்டிலேயே கேப்பையை வாங்கி அலசி ஊறவைத்து நீர் வடித்து மிக்ஸியில் திரித்து சலித்துக் கொள்ளலாம். இது இன்னும் சுவையாக இருக்கும். ), உப்பு - 1சிட்டிகை, சீனி  அல்லது வெல்லம் - கால் கப், தேங்காய்த்துருவல் - கால்கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- கேப்பையை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவும். கால் கப் தண்ணீர் போதுமானது. ஒன்று சேர்ந்து பிடித்தால் கொழுக்கட்டையாகப் பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிரவேண்டும் . இதுவே பக்குவம். ஒரு சல்லடையில் இம்மாவைச் சலித்து இட்லிச் சட்டியில் துணி போட்டு ஆவியில் பத்து நிமிடம் வேகவிடவும். ஒரு பௌலில் சீனி நெய், தேங்காய் போட்டுக் கலந்து வைக்கவும். சூடாகப் புட்டை உதிர்த்துக்கொட்டிக் கலந்து பரிமாறவும். மிகவும் ருசியான & சத்தான புட்டு இது.
  

ஞாயிறு, 19 ஜூலை, 2020

கீமா பராத்தா.

கீமா பராத்தா.

தேவையானவை:- கோதுமை மாவு - 1 கப், மட்டன் கைமா - 150 கி, பெரிய வெங்காயம் - 1, மிளகாய்ப்பொடி - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், வெந்த கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன். தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன். உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 50 கிராம். தாளிக்க பட்டை கிராம்பு, ஏலக்காய் - தலா 1, சோம்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- குக்கரில் மட்டன் கைமாவை கால் கப் தண்ணீர் விட்டு மூன்று நான்கு விசில் நன்கு வேகவிடவும். ஒரு பானில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளிக்கவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு மிளகாய்த்தூள், மல்லித்தூள் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி வெந்த கைமாவைப் போடவும். நன்கு சுருள வெந்ததும் வெந்த கடலைப் பருப்பு, தேங்காய்த்துருவலைச் சேர்த்து இன்னும் இரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெயைச் சேர்த்துப் பிசைந்து பத்துநிமிடம் ஊறவிடவும். பின் சப்பாத்தி போல் உருண்டைகள் செய்து அதில் கைமா மசாலாவை உருட்டி வைத்து மூடி கனமான சப்பாத்திகளாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வெந்ததும் சூடாக எடுத்து அச்சார் ( ஊறுகாய்) தயிர் ஆகியவற்றுடன் பரிமாறவும்.
  

சனி, 18 ஜூலை, 2020

முட்டைப் பரோட்டா.

முட்டை பரோட்டா:-

தேவையானவை:- முட்டை - 2. பரோட்டா - 1.பெரிய வெங்காயம் - 1. உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகு சீரகத்தூள் - கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2. மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், தக்காளி -பாதி. கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

செய்முறை. பரோட்டாவை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். தக்காளியைத் துண்டுகள் செய்து கொள்ளவும். ஒரு கனமான இருப்புச்சட்டியைக் காயவைத்து அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். ( எண்ணெய் ஊற்ற வேண்டாம். ) அதன் ஈரப்பசை லேசாகப் போனதும் அதில் பொடியாக அரிந்த பரோட்டாவைப் போட்டுப் புரட்டவும். நன்கு கலந்ததும் அதில் பச்சை மிளகாய் , உப்பு, எண்ணெய் , மிளகாய்ப் பொடியைப் போட்டு அதன் மேலேயே இரண்டு முட்டைகளையும் உடைத்து ஊற்றவும்.

பரோட்டாவைக் கொத்த தோசைக்கரண்டியைப் பயன்படுத்தவும். இனி தோசைக் கரண்டியைப் பிடித்து முட்டையைப் பிரட்டிப் போட்டு, பரோட்டா வெங்காயத்தைக் கலந்து விட்டு கொத்திக் கொத்திக் கிண்டவும். ஐந்து நிமிடம் கடையில் கிண்டுவதுபோல் கொத்திக் கிண்டி முட்டை வெந்ததும் அதில் தக்காளி மிளகாய்ப்பொடி கருவேப்பிலை போட்டு நன்கு புரட்டி இறக்கி சூடாக குருமாவோடு பரிமாறவும். 
  

திங்கள், 1 ஜூன், 2020

பேபிகார்ன் பஜ்ஜி/ஃப்ரிட்டர்ஸ்.

பேபிகார்ன் பஜ்ஜி/ஃப்ரிட்டர்ஸ்.

தேவையானவை:- பேபிகார்ன் - 6 பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 100 கி அல்லது கடலைமாவு - 1 கப் + அரிசிமாவு ஒரு டீஸ்பூன்+ மி.பொடி - கால் டீஸ்பூன் + உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கடலைமாவில் அரிசிமாவு மிளகாய்பொடி உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். பேபிகார்னை இரண்டாகவோ நான்காகவோ நீளவாக்கில் வெட்டி வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு நீரை வடிய வைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து பேபிகார்ன் துண்டுகளை பஜ்ஜி மாவில் தோய்த்துப் போட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும்.

பஜ்ஜிமாவில் கொஞ்சம் மைதாவும் கார்ன்ஃப்ளோரும் கலந்து கொண்டால் க்ரிஸ்பியாக இருக்கும். இதுவே ஃப்ரிட்டர்ஸ்.
Related Posts Plugin for WordPress, Blogger...