எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பொங்கல் சமையல் & பொங்கல் குழம்பு.

பொங்கல் சமையல் & பொங்கல் குழம்பு. 

பொங்கல் சமையலில் முதலில் சர்க்கரைப் பொங்கல், வெள்ளைப் பொங்கல் இடம் பெறும். இது இரண்டும் சூரியனுக்கு நேர் எதிரே கீழ் வாசலில் அல்லது முற்றத்தில் கோலமிட்டு ( முன்காலத்தில் - முப்பது வருடங்களுக்கு முன் அம்மா வீட்டில் சாமி வீட்டுக்கு எதிரில் கோலமிட்டு மணல் கொட்டி அதன் மேல் கோலமிடப்பட்ட செம்மண் யானையடிக்கல் வைத்து கோலமிடப்பட்ட இரும்பு அடுப்பை வைத்து அதன் மேல்)  கோலமிடப்பட்ட முறித்தவலையில் மஞ்சள் கொத்துக் கட்டிப் பொங்கல் இடுவார்கள்.  இப்போது எல்லாம் காஸ் அடுப்பில்தான். 

அதற்குள் அடுப்படியில் மூன்று குழம்பு, ரசம், நான்கு பொரியல் , ஒரு கூட்டு, பருப்பு, அப்பளம் நெய் தயார் செய்து இவற்றையும் இலையில் படைத்துக் கும்பிட்டு அடுப்புக்கும் சூரியனுக்கும் நிவேதித்துத் தேங்காய் உடைத்துத் தீப தூபம் காட்டி அதன் பின் சாமி அறைக்கு எடுத்து வந்து நிவேதித்து உண்பார்கள்.

கத்திரிக்காய், கருணைக்கிழங்கு, பரங்கிக்காய் இம்மூன்றையும் கெட்டிக் குழம்பு வைப்பார்கள். தக்காளி ரசம், பருப்பு, அப்பளம் பொரித்து நெய்யை உருக்கி வைப்பார்கள். வாழைக்காய் புளிக்கறி, அவரைக்காய், தட்டைப்பயித்தங்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன உப்புப் பொரியல். பலாக்காய் கூட்டு வைப்பார்கள். அம்மா வீட்டில் கீரை மசிப்பார்கள்.

இவற்றைப் படைத்துக் கும்பிட்டு உணவருந்தியதும் (சர்க்கரைப் பொங்கல் அநேகமாகத் தீர்ந்துவிடும். ) வெள்ளைப் பொங்கலை உருண்டையாக உருட்டி பெரிய பாத்திரத்தில் நீரில் போட்டு வைப்பார்கள். எல்லாக் காய்களையும் குழம்பையும் ரசத்தையும் பருப்பையும் ஒன்றாக்கிக் கொதிக்க வைத்து இறக்குவார்கள். இதுதான் பொங்கல் குழம்பு.

இரவு  ஆளுக்கொரு சோற்று உருண்டையுடன் மோர் ஊற்றி சுடச் சுட இந்தக் குழம்பையும் காயையும் கொடுப்பார்கள். தேவாமிர்தம். மறுநாள் இந்தப் பொங்கல் குழம்புடன் ஆப்பம் ( தேங்காய்ப்பாலும் உண்டு ) காலை டிபனாக இருக்கும். ஹ்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். :) 
    

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...