எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

கல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.

கல்யாண சமையல் :-
1. அசோகா
2. வெஜ் பட்டர் ஊத்தப்பம்
3. மஷ்ரூம் பிரியாணி.
4. தென்னம்பாளைப் பொடிமாஸ்
5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்
6. மிக்ஸட் தால் பாயாசம்.


1.அசோகா :-

தேவையானவை :-
பாசிப்பருப்பு – 1 கிலோ , கோதுமை மாவு – 1 கிலோ,  எண்ணெய் - அரை கிலோ, நெய் – கால் கிலோ, டால்டா - கால் கிலோ, சர்க்கரை – ஒன்றரைக் கிலோ. முந்திரி பாதாம் கிஸ்மிஸ் – தலா ஒரு கப், ஏலக்காய் – 25 கிராம் தோலோடு பொடிக்கவும். ரெட் ஃபுட் கலர் - சிறிது.

செய்முறை :-
பாசிப்பருப்பை வேகவிடவும். நன்கு வெந்ததும் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும். கோதுமை மாவை எண்ணெயைக் காயவைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் நீர்க்கக் கரைத்த பாசிப்பருப்பை ஊற்றவும். இரண்டும் சேர்ந்து சுருண்டு வரும்போது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கலர்ப்பொடி சேர்க்கவும், நெய்யை உருக்கி அதில் முந்திரி பாதாம் கிஸ்மிஸை வறுக்கவும். உருக்கிய மிச்ச நெய்யையும் டால்டாவையும்  அல்வாவில் அவ்வப்போது ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வந்ததும் இறக்கி முந்திரி பாதம் கிஸ்மிஸை சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
2 . வெஜ் பட்டர் ஊத்தப்பம் :-
தேவையானவை :- இட்லி மாவு – 10 கிலோ, காய்கறிக் கலவை – 2 கிலோ ( துருவிய காரட், பீன்ஸ், கோஸ், பெரிய வெங்காயம், சிறிது பீட்ரூட், தக்காளி, கொத்துமல்லி கருவேப்பிலை, பச்சைப்பட்டாணி , பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து ). அமுல் பட்டர் – 10 பாக்கெட், எண்ணெய் – ஊத்தப்பம் சுடத் தேவையான அளவு.

செய்முறை:-
காய்கறிக் கலவையைத் தயார் செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவைக் குட்டி ஊத்தப்பங்களாகப் போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் காய்கறிக் கலவை சேர்த்து எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேகவைக்கவும். திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வேகவைத்து சூட்டோடு ஒரு டீஸ்பூன் அமுல் பட்டர் போட்டுப் பரிமாறவும். அமுல் பட்டரில் உப்பு இருப்பதால் காய்கறிக் கலவையில் உப்பு சேர்க்க வேண்டாம். 

3. மஷ்ரூம் பிரியாணி:-
தேவையானவை:-
பட்டன் மஷ்ரூம் – 10 பாக்கெட், பாசுமதி ரைஸ் – 3 கிலோ, பெரிய வெங்காயம் -  15 பொடியாக அரிந்தது, தக்காளி -  8 பொடியாக அரிந்தது. அரைக்க:- பச்சை மிளகாய் – 10. தேங்காய் – 2,  இஞ்சி - 5 இன்ச் துண்டு, பூண்டு - 3 முழுதாக, சோம்பு –  2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டேபிள் ஸ்பூன், மிளகு –  அரை டேபிள் ஸ்பூன், புதினா – 1 கட்டு, கொத்துமல்லி - 1 கட்டு, மிளகாய்த்தூள்ஒன்றரை டேபிள் ஸ்பூன், மல்லித்தூள்ஒன்றரை டேபிள் ஸ்பூன், தயிர்அரை லிட்டர். தாளிக்க :- எண்ணெய் – 200 கிராம், பட்டை - 4 இன்ச் துண்டு, கிராம்பு – 6, ஏலக்காய் – 6, இலை - 1 இன்ச் துண்டு 4 அன்னாசிப் பூ – 1முழுதாக. உப்பு – 50 கிராம்.

செய்முறை :-
மஷ்ரூமை சுத்தம் செய்து இரண்டாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் 3 நிமிடம்போட்டு அலசவும்.அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரைத்து அதில் மிளகாய்ப்பொடி மல்லிப்பொடி தயிரைச் சேர்க்கவும்.
 அரிசியை நன்கு களைந்து நீரை வடித்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வறுத்து வைக்கவும்
 ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை ., கிராம்பு., ஏலக்காய்., இலை., அன்னாசிப்பூ எல்லாம் தாளிக்கவும். அதில் வெங்காயம்., தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.காளானையும் அரிசியை சேர்க்கவும். உப்பு சேர்த்து அரைத்தமசாலாவைத் தயிருடன் சேர்க்கவும்.. நன்கு கிளறி ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து குக்கரை இறக்கவும்.  மஷ்ரூம் பிரியாணியை வெங்காயத் தயிர்ப்பச்சடி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

4. தென்னம்பாளைப் பொடிமாஸ்:-

தேவையானவை :-
தென்னம்பாளை – 1, காராமணி – ஒரு கிலோ, கடலைப்பருப்பு – அரை கிலோ, வரமிளகாய் – 100 கிராம், சோம்பு – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டேபிள் ஸ்பூன், தேங்காய் – 1, பெரிய வெங்காயம் – ஒரு கிலோ, உப்பு – 50 கிராம்,  தாளிக்க :- எண்ணெய் – 150 கிராம், கடுகு  - 1 டேபிள் ஸ்பூன், உளுந்து – 2 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1 கைப்பிடி. 
செய்முறை :-
தென்னம்பாளையை சுத்தம் செய்து உதிர்த்துக் கொள்ளவும். காராமணி, கடலைப்பருப்பைத் தனித்தனியாகக் களைந்து ஊறவைக்கவும். வரமிளகாய் சோம்பு சீரகத்தை உப்பு சேர்த்து அரைக்கவும். தென்னம்பாளையை லேசாக அரைத்து தண்ணீரில் கரைத்துப் பிழிந்து வைத்துக் கொள்ளவும். ,இத்துடன் காராமணி கடலைப்பருப்பை அரைத்து இட்லிப் பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து உதிர்க்கவும். தேங்காயைத் திருகி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் கருவேப்பிலையை வதக்கவும். அரைத்த மிளகாய் சோம்பு மசாலா போட்டு பச்சை வாசனைபோனதும் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து உதிர்த்த தென்னம்பாளைப் பொடிமாஸைப் போட்டு வதக்கவும். நன்கு வதக்கி உப்பு சேர்த்து தேங்காய்த் துருவல் போட்டுக் கலந்து இறக்கவும். 
5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்:-
தேவையானவை :-
காரட் – 10, பீன்ஸ் – ½ கிலோ, உருளைக்கிழங்கு – 1 கிலோ, பச்சைப் பட்டாணி – ½ கிலோ, காலிஃப்ளவர் – 2, பனீர் – 2 பாக்கெட், காளான் – 2 பாக்கெட்,
பேபிகார்ன் – ஒரு பாக்கெட், டபிள் பீன்ஸ் – ½ கிலோ, பெரிய வெங்காயம் – 8 தக்காளி – 4, பூண்டு – 2 முழுதாக.  அரைக்க :- வரமிளகாய் – 30, சோம்பு – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், தேங்காய் – 1, கசகசா – 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 8, பொட்டுக்கடலை – 1 கப்., உப்பு – 3 டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய் – 150 கி , கடுகு –1 டேபிள் ஸ்பூன், உளுந்து – 2 டேபிள் ஸ்பூன், சோம்பு – 2 டீஸ்பூன், பட்டை கிராம்பு ஏலக்காய் – தலா 4, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி

செய்முறை :-
வெங்காயம் தக்காளி பூண்டை உரித்து நறுக்கி வைக்கவும். காரட் உருளைக்கிழங்கைத் தோலுரித்து சதுரமாக துண்டுகள் செய்யவும். பனீரைத் துண்டுகள் செய்து எண்ணெயில் வறுத்து வைக்கவும். காலிஃப்ளவர் , காளானை துண்டுகள் செய்து உப்புப் போட்ட வெந்நீரில் போடவும். பீன்ஸை சதுரமாக நறுக்கி வைக்கவும். சதுரத்துண்டுகள் செய்து பேபிகார்னையும் டபிள் பீன்சையும் குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.

மசாலா சாமான்களை இரண்டு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து சோம்பு தாளித்து பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும். அதில் வெங்காயம் தக்காளி கருவேப்பிலை பூண்டை வதக்கி காரட் உருளைக்கிழங்கு பட்டாணி பீன்ஸை சேர்க்கவும்.  இரண்டு நிமிடம் வதக்கி காலிஃப்ளவர் காளானைச் சேர்க்கவும். வேகவைத்த டபிள் பீன்ஸ் பேபிகார்னைச் சேர்த்து நன்கு கலக்கவும். இன்னொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மசாலாவை நன்கு வதக்கி இதில் சேர்த்து சிறிது நீர் ஊற்றிக் கலக்கி மூடி போட்டு நன்கு வேக விடவும். வெந்ததும் பனீரைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


6. மிக்ஸட் தால் பாயாசம்.

தேவையானவை :-
பாசிப்பருப்பு  – ஒரு கிலோ, கடலைப் பருப்பு – கால் கிலோ, பச்சரிசி – கால் கிலோ, மூன்றையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்துக் கொரகொரப்பாகப் பொடிக்கவும். வெல்லம் – 2 கிலோ, நெய்- 100 கிராம், தேங்காய் – 2 திருகி கொரகொரப்பாக அரைக்கவும். முந்திரி கிஸ்மிஸ் – தலா 50 கிராம். ஏலக்காய் – 15 பொடிக்கவும்.
செய்முறை :-

 பச்சரிசி பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மாவை எடுத்து 6 பங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விடவும் . கொதித்து வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு வெந்நீரில் கரைத்து வடிகட்டிச் சேர்க்கவும். வெல்லமும் சேர்ந்து கொதித்ததும் அரைத்த தேங்காய் போட்டு கொதிக்க விடாமல் இறக்கவும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் போட்டு ஏலப்பொடி சேர்த்து இறக்கவும். 

டிஸ்கி :- சட்னி வகைகளைப் பாராட்டிய பொரவச்சேரி ம. வேதவள்ளிக்கு நன்றி. 



2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...