மகான்கள் ரெசிப்பீஸ்.
1.மாம்பழ கேசரி.
2.பொட்டுக்கடலை
மாவுருண்டை
3.நீர் தோசை.
4.பாசிப்பயறு
கொழுக்கட்டை
5.காபூலி சன்னா
காய்கறி சுண்டல்
6.சாமை சீரகப் பொங்கல்.
7.பரங்கிப்பிஞ்சுத்
துவட்டல்
8.மாதுளங்காய்
தயிர்ப்பச்சடி
9.பப்பாளிக்காய்
மிளகுப் பொரியல்.
10.ஜவ்வரிசிப்
பருப்புப் பாயாசம்
1.மாம்பழ கேசரி
:-
தேவையானவை:-
வெள்ளை ரவை – 1 கப், நெய் – முக்கால் கப், சர்க்கரை- 2 கப், மாம்பழம் – 1, மாங்கோ எஸன்ஸ்
– சில துளிகள், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.
செய்முறை:-
வெள்ளை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். சிறிது நெய்யில் முந்திரி கிஸ்மிஸை
வறுத்து வைக்கவும்.மாம்பழத்தைத் தோல் சீவி ஒரு பகுதியை சிறு துண்டுகளாகச் செய்து மீதியை
மசித்து வைக்கவும். ரவையில் இரண்டு கப் கொதிநீர் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும்
ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து சர்க்கரையைப் போடவும். சர்க்கரை கரைந்து ஒட்டாமல் வேகும்போது
நெய்யை ஊற்றவும். மாம்பழச் சாற்றையும் ஊற்றி இறக்கப் போகும் முன் மாம்பழத் துண்டுகள்,
முந்திரி, கிஸ்மிஸ் போட்டுக் கலந்து எஸன்ஸ் ஊற்றி நன்கு கலக்கி நெய் தடவிய பாத்திரத்தில்
மாற்றவும். நிவேதிக்கவும்.
2.பொட்டுக்கடலை
மாவுருண்டை
தேவையானவை:-
பொட்டுக்கடலை – 2 கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை.
உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:-
பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து நைஸாக சலிக்கவும். சர்க்கரையையும் பொடித்துச் சலிக்கவும்.
நெய்யை உருக்கவும். பொட்டுக்கடலைப் பொடி, சர்க்கரைப் பொடி , ஏலப்பொடி, உப்பு கலந்து
நெய்யை சூடாக ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும். நிவேதிக்கவும்.
3.நீர் தோசை.
தேவையானவை:-
பச்சரிசி – 1 கப், தேங்காய்த்துருவல் – அரை கப், உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய் –
தேவையான அளவு.
செய்முறை:-
பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து தேங்காய்த்துருவல் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.
நீர் சிறிது அதிகம் சேர்த்து நீர்க்கக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து துணியில்
எண்ணெய் தடவவும். இந்த தோசை மாவைக் கரண்டியில் மோந்து தோசைக்கல்லில் ஊற்றி நாலா பக்கமும்
சுழற்றவும். நீர்க்க இருப்பதால் மெல்லிய தகடுபோல விரியும் மூடி போட்டு வேகவைத்து நான்காக
மடித்து எடுத்துப் பரிமாறவும். ஆறியபின்னும் நன்கு மெத்தென்று வெண்மையாகவே இருக்கும்.
சுடும்போது தீயை மிதமாக வைப்பது நல்லது.
4.பாசிப்பயறு
கொழுக்கட்டை
தேவையானவை:-
கொழுக்கட்டை மாவு – 1 கப், உடைத்த பாசிப்பயறு – அரை கப், தேங்காய்த்துருவல் – கால் கப், உப்பு
– கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – சிறிது, வரமிளகாய்
– 1. நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:-
பாசிப்பயறை வேகவிடவும் முக்கால் பதம் வெந்ததும் இறக்கி அதில் கொழுக்கட்டை மாவு, உப்பு,
தேங்காய்த்துருவலைப் போடவும். நெய்யில் சீரகம், பொடிதாக உடைத்த வரமிளகாய், கொழுந்து
கருவேப்பிலை தாளித்து மாவில் போட்டு நன்கு கலந்து வெந்நீர் தெளித்துப் பிசைந்து பிடி
கொழுக்கட்டைகளாக ஆவியில் வேகவைக்கவும். நிவேதிக்கவும்.
5.காபூலி சன்னா
காய்கறி சுண்டல்
தேவையானவை:-
காபூலி சன்னா ( வெள்ளைக் கொண்டைக்கடலை ) – 1 கப், காய்கறிக் கலவை -1 கப், ( காரட்,
பீன்ஸ், ), தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து
– தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன்.
எலுமிச்சை சாறு – சில துளிகள்.
செய்முறை:-
காபூலி சன்னாவை முதல்நாளே கழுவி ஊறப்போடவும். மறுநாள் குக்கரில் உப்பு சேர்த்து 4,
5 விசில் வரும்வரை வேகவிடவும். காய்கறியை சின்ன சின்னச் சதுரங்களாக நறுக்கவும். எண்ணெயைக்
காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து வரமிளகாயை சிறிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும்.
கருவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் காய்கறிக் கலவையைப் போட்டு வதக்கவும். சிறிது நீர்
தெளித்து மூடி போட்டு வெந்ததும் வேகவைத்த சன்னா, தேங்காய்த் துருவல் போட்டு நன்கு கிளறி
எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும். நிவேதிக்கவும்.
6.சாமை சீரகப்
பொங்கல்.
தேவையானவை:-
சாமை – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், மிளகு – 10, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், நெய்-
1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய்- 1, இஞ்சி – ஒரு இன்ச் துண்டு, கருவேப்பிலை – 1 இணுக்கு,
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 10. உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:-
சாமையைக் களைந்து கல் அரிக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன் போட்டு மூன்றரை கப் தண்ணீர்
விட்டு இரண்டாகக் கிள்ளிய பச்சை மிளகாய், மிளகு, அரை டீஸ்பூன் சீரகம், பொடியாக அரிந்த
இஞ்சி போட்டு 4, 5 விசில் வரும்வரை வைத்து இறக்கி நன்கு உப்பு சேர்த்து மசிக்கவும்.
நெய்யில் உளுந்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை
தாளித்து பொங்கலில் கொட்டி நன்கு கிளறி சிறிது நேரம் மூடிவைத்து பின் நிவேதிக்கவும்.
7.பரங்கிப்பிஞ்சுத்
துவட்டல் :-
தேவையானவை:-
பரங்கிப் பிஞ்சு – 1, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன் தாளிக்க :- கடுகு, உளுந்து
கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை
– 1 இணுக்கு, எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:-
பரங்கிப் பிஞ்சின் தோலைச் சீவிப் பொடிப்பொடியாக பல் போல அரியவும். எண்ணெயைக் காயவைத்துக்
கடுகு உளுந்து கடலைப்பருப்பைத் தாளிக்கவும். பருப்புவகைகள் சிவந்ததும் வரமிளகாய் பச்சை
மிளகாயைக் கிள்ளிப்போட்டு கருவேப்பிலை சேர்க்கவும். நறுக்கிய பரங்கிப் பிஞ்சைத் தண்ணீரில்
கழுவி தாளிதத்தில் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். நன்கு கிளறி மூடி போட்டு வேகவிடவும்.
வெந்ததும் உப்பு தேங்காய்த்துருவல் போட்டு இறக்கி நிவேதிக்கவும்.
8.மாதுளங்காய்
தயிர்ப்பச்சடி :-
தேவையானவை:-
முக்கால் பதமான மாதுளங்காய் (பழம்) – 1, புளிக்காத கெட்டித் தயிர் – 2 கப், கொத்துமல்லித்
தழை – சிறிது, சீரகப் பொடி – அரை டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், சீனி- ஒரு சிட்டிகை,
எலுமிச்சை சாறு – கால் டீஸ்பூன்.
செய்முறை:-
மாதுளங்காயைத் தோலுரித்து முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். இவை மிகுந்த துவர்ப்பாக
இருக்கும். புளிக்காத தயிரில் சீனி உப்பு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கரைக்கவும்.
மாதுளை முத்துக்களைச் சேர்த்துக் கலக்கி சீரகப் பொடி தூவி கொத்துமல்லியைப் பொடியாக
நறுக்கிப் போட்டு நிவேதிக்கவும்.
9.பப்பாளிக்காய்
மிளகுப் பொரியல்.
தேவையானவை:-
பப்பாளிக்காய் – 1 சின்னம், நெய் – 3 டீஸ்பூன், மிளகு – 10, தேங்காய்த் துருவல் –
1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:-
பப்பாளிக்காயைத் தோல்சீவி விதை நீக்கி பல்லுப் பல்லாக நறுக்கவும். நெய்யைக் காயவைத்துக்
கடுகு உளுந்து கடலைப்பருப்பைத் தாளித்து பப்பாளிக்காயைச் சேர்க்கவும். தண்ணீர் தெளித்து
மூடி வைத்து நன்கு வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்த்து மிளகை கொரகொரப்பாகப் பொடித்துப்
போடவும். தேங்காய்த் துருவல் போட்டுப் பிரட்டி இறக்கவும். நிவேதிக்கவும்.
10.ஜவ்வரிசிப்
பருப்புப் பாயாசம்
தேவையானவை:-
ஜவ்வரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், பால் – ஒரு லிட்டர், நெய் – 1 டேபிள்
ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா – 10. ஏலப்பொடி – கால் டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப்.
செய்முறை:-
நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுக்கவும் அதில் ஜவ்வரிசியைப் போட்டுப் பொரியவிடவும்
பொறிந்ததும் பாசிப்பருப்பு சேர்த்து அரை லிட்டர் பாலை ஊற்றிக் குக்கரில் ஒரு சவுண்ட்
வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் மிச்சபாலை
ஊற்றிக் கொதிக்க விடவும். ஏலப்பொடிபோட்டு நெய்யில் பொறித்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்துக்
கலக்கி நிவேதிக்கவும்.
டிஸ்கி:- இந்த நிவேதனங்கள் செப். 23, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!