எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 அக்டோபர், 2014

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் நிவேதனங்கள்.VINAYAGAR CHATHURTHI RECIPES

இந்த நிவேதனங்கள் ஆகஸ்ட் 16 - 31, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

1.ஃப்ரூட் & நட்ஸ் மோதகம்.

தேவையானவை:

பச்சரிசி ரவை – 2 கப்,
வெல்லத்தூள் – 1 1/2 கப்,
பேரீச்சை – 2
கிஸ்மிஸ் – 10
டூட்டி ப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 6
பாதாம் – 4.
நெய் – ¼ கப்
தேங்காய் துருவல் – ஒரு மூடி.
ஏலக்காய் - 3


செய்முறை:

கடாயில்  நெய்யை ஊற்றி பச்சரிசி ரவையை வாசம் வரும்வரை வறுத்து 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு சவுண்டு வரும்வரை வேகப்போடவும்.


பொல பொலவென உப்புமா போல உதிர்த்துக் கொள்ளவும். அதில் ஏலத்தைப் பொடித்து தேங்காய்த் துருவலுடன் கலக்கி வைத்துக் கொள்ளவும். 


வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கவைத்து ரவையில் சேர்க்கவும். தண்ணீர் அளவும் வெல்லப்பாகும் சரியாகச் சேர்த்தால் உருண்டை பிடிக்க வரும். நீர்க்க இருந்தால் அடுப்பில் வைத்துக் கிளறவும். 


இறுகியதும் இறக்கி டூட்டி ப்ரூட்டி, பொடியாக நறுக்கிய பேரீச்சை, கிஸ்மிஸ், வறுத்து ஒடித்த பாதாம் முந்திரி, கலந்து. மாவை நன்கு பிசறி நெய் தொட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதனம் செய்யவும். 



2. கோதுமை வெல்ல அப்பம். :-

தேவையானவை:-
கோதுமை மாவு  - 2 கப்
வெல்லம் – 3 அச்சு
தேங்காய் சன்னமாகத் துருவியது – 1 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி – ½ டீஸ்பூன்.
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவும்

செய்முறை:-
வெல்லத்தை நைத்து வெந்நீரில் கரைத்துக் கோதுமை மாவில் வடிகட்டி கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். அதில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்க்கவும்.

எண்ணெயைக் காயவைத்து மாவை நன்கு கலக்கி ஊற்றி அப்பங்களாகப் பொரித்தெடுக்கவும்.
( அரிசி அப்பம் வேண்டுமென்றால் பச்சரிசி மாவில் வெல்லப்பாகு ஊற்றி எல்லாவற்றையும் சேர்த்துக் கரைத்து சிறிது நேரம் ஊறவைத்துச் செய்யவும். )




3. இலை அடை. ( பலாச்சுளை)

தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 2
பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப் ( விருப்பப்பட்டால்)

செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும்.
ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும்.
தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும்.

இலையை சம துண்டுகளாக வெட்டவும்.
இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும்.
அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும்.
விருப்பப்பட்டால் பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும்.
ரெண்டாக மடித்து ஒட்டவும்.

ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
வாழை இலைகளை எடுத்துவிட்டுஅடைகளை நிவேதனம் செய்யவும்.


4. தேங்காய்ப்பால் கொழுக்கட்டை

இட்லி அரிசி- 2 கப்
வெல்லம் - 1கப்,
தேங்காய் -  1
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு -  1 சிட்டிகை

செய்முறை:-

இட்லி அரிசியைக் கழுவி ஊறவைத்து கிரைண்டரில் நைஸாக ஆட்டிக் கொள்ளவும். அதிகப்படியான தண்ணீரை உறிஞ்ச சுத்தமான காட்டன் துணியில் மாவைக் கொட்டி மூடி வைக்கவும்.

தேங்காயைத் துருவி 3 பால் பிழிந்து கொள்ளவும்.

அரைத்த மாவை சீடைக்காய்கள் போலக் கிள்ளி நீளவாக்கில் உருட்டிப் போடவும்.

மூன்றாம் பாலில் வெல்லத்தைப் போட்டுக் கரைக்கவும். அதில் இரண்டாம் பாலையும் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். கொழுக்கட்டைகளைக் கையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துத் தூவவும். அடுத்துக் கொதிவந்ததும் அடுத்த கைப்பிடி தூவவும்..கொதித்ததும் கரண்டியால் நன்கு கிளறாமல் லேசாகக் கலக்கி விடவும். அடிக்கடி வேகமாகக் கலக்கினால் கொழுக்கட்டைகள் மாவாகக் கரைந்து விடும்.

எல்லாக் கொழுக்கட்டையும் தூவியதும் கொதி வந்ததும் கொழுக்கட்டைகள் மேலே எழும்பி வரும். இப்போது கரண்டியால் நன்கு கலக்கி ஏலப்பொடி தூவி முதல் பால் ஊற்றி இறக்கி நைவேத்தியம் செய்யவும்.

( பாயாசம் செய்வதற்குப் பதிலாக இதையே நிவேதிக்கலாம். )

.
5. நாட்டுச் சோள சுண்டல்

தேவையானவை:

நாட்டு சோளம் –ஒரு கப்,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்,
வரமிளகாய் – 4
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் –1 சிட்டிகை
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கருவேப்பிலை.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
நாட்டுச் சோளத்தை 12 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து குக்கரில்4 விசிலுக்கு வேக விடவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு, பெருங்காயப் பொடி, கருவேப்பிலை தாளிக்கவும். வேக வைத்த சோளத்தை அதில் சேர்த்து, சிறிது உப்பு போட்டு, பொடித்த மசாலாவை சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.


6. தலியா (கோதுமை ரவை) கேசரி.(DALIA)

தலியா (கோதுமை ரவை கேசரி

தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1 1/2 கப்
பால் – 1 லி.
சீனி – ¾ கப்
நெய் – ¾ கப்
முந்திரிப்பருப்பு – 10
கிஸ்மிஸ் – 10
ஏலக்காய் - 3


செய்முறை

கோதுமை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துப் பால் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து குக்கரில் 2 விசிலுக்கு வேகப்போடவும்.

இறக்கி கடாயில் போட்டு சீனி சேர்த்துக் கிளறவும். சீனி இளகி இறுகி வரும்போது நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துக் கொட்டவும். ஏலப்பொடியைத் தூவி இறக்கவும். விரும்பினால் பாலில் குங்குமப்பூவைக் கரைத்தும் சேர்க்கலாம்.

 .
7.அவல் போகா.

தேவையானவை:-
தட்டை அவல் – 2 கப்
தேங்காய் எண்ணெய் – 10 மிலி
முந்திரிப் பருப்பு - 10
கடலைப் பருப்பு –  1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – 1 இணுக்கு
உப்பு – ½ டீஸ்பூன்

செய்முறை.:-

அவலை சுத்தம் செய்யவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, வேர்க்கடலை, இரண்டாக நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலையை வறுக்கவும். அதில் முந்திரியையும் பொட்டுக்கடலையையும் போடவும். உப்பு சேர்த்து அவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பொறிக்க வேண்டாம். கலந்தாலே போதும்

இது கோயில் போன்ற இடங்களுக்கு செல்லும்போதும் பயணத்தின் போதும் எடுத்துச் செல்ல உகந்தது. விரத காலத்திலும் சாப்பிட உகந்தது. விநாயகருக்கு நைவேத்தியம் செய்யவும்.

8. இளநீர் ரசம்.
தேவையானவை:-
இளநீர் – 2
துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிஸ் ஸ்பூன்
தக்காளி – 1
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.
உப்பு – 1 டீஸ்பூன்
புளி – 2 சுளை.
எண்ணெய்/நெய் – 2 டீஸ்பூன்,
கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:-
உப்புப் புளியை ½ கப் தண்ணீரில் கரைத்து அதில் தக்காளியையும் இளநீரைத் தனியாக எடுத்து வைத்து விட்டு இளநீர் வழுக்கையையும் போட்டுப் பிசைந்து வைக்கவும். அதில் மிளகாய், மிளகு , சீரகத்தைப் பொடித்துப் போடவும்.வேகவைத்த துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும்.

எண்ணெயை/நெய்யைக் காயவைத்துக் கடுகு சீரகம், வெந்தயம் தாளித்து கருவேப்பிலை பெருங்காயப் பொடி போட்டுக் கரைத்து வைத்த கலவையை ஊற்றவும். அதுசூடேறி வரும்போது இளநீரை ஊற்றிக் கொதி வந்ததும் இறக்கவும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...