எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 அக்டோபர், 2016

தீபாவளி ரெசிப்பீஸ். DIWALI RECIPES.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

1.அஞ்சீர் ஹல்வா ( அத்திப்பழம் )
2.டயமண்ட் கட்
3.உண்டம்பொரி
4.பின்னி
5.சுக்டி ( வெல்ல பாப்டி)
6.மலாய் சந்தேஷ்
7.ட்ரைஃப்ரூட் பர்ஃபி
8.ஃப்ரூட்டி ஃபிர்னி
9.கம்பு அதிரசம். ( பாஜ்ரா -  சாஜ போரேலு)
10.ஜோவர் லட்டு. ( சோள லட்டு )
11.சுர்மா லாடு
12.மில்கி நெஸ்ட்
13.ஃப்ரூட் & நட்ஸ் கச்சோரி
14.பிங்க் கத்லி
15.சாக்லெட் அக்ரூட் பர்ஃபி
16.மல் பூரி
17.ஆக்ரா ஸ்வீட் – அங்கூரி பேடா.
18.சேப் பாதாம் அல்வா
19.ஃபார்சி பூரி (பில்லாலு).


20.சீஸ் வெஜ் பால்ஸ்
21.மாத்ரி
22.டிக்கா கதியா
23.மிக்ஸ்ட் வெஜ் முதியா
25.ஆலு புஜியா
25.கட்டா மீட்டா நம்கின்
26.ரிங் முறுக்கு
27.தினை தேன்குழல்.
28.சிப்பி சோஹி
29.சேவ் சோளாஃபலி
30.குழலப்பம்


தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.


1.அஞ்சீர் ஹல்வா ( அத்திப்பழம் )

தேவையானவை:- காய்ந்த அத்திப்பழம் – கால் கப், நெய் – 3 டேபிள் ஸ்பூன், ஆல்மோண்ட்ஸ்/பாதாம் – ஊறவைத்து தோலுரித்து பொடித்தது – அரை கப், சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன், பால்பவுடர் – 5 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், அலங்கரிக்க குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- ஒரு பானில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கும்போது காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 3, 4 நிமிடங்கள் வேகவிடவும். மென்மையானவுடன் வடிகட்டவும். மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களைப் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும். நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு சூடுபடுத்தவும். பொடித்த பாதாமைப்போட்டு இரண்டு நிமிடம் கிளறவும். இதில் அரைத்த அத்திப்பழ பேஸ்ட்., பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் விடாமல் கிளறவும். இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.

2. கேரளா டயமண்ட் கட்:-

தேவையானவை:- மைதா – 1 கப், சர்க்கரை – கால் கப் + 1 டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பேக்கிங்க் சோடா – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- சர்க்கரையை மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். ஒரு பௌலில் மைதாவைப் போட்டு அதில் சர்க்கரை, நெய், பேக்கிங்க் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதில் தண்ணீரைத் தெளித்து மென்மையாகப் பிசைந்து பதினைந்து நிமிடம் ஈரத்துணி போட்டு ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் சப்பாத்தி போல இட்டு சோமாஸ் ஸ்பூனால் கீறி டைமண்டாக வில்லைகள் செய்து எண்ணெயைக் காயவைத்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

3.உண்டம்பொரி :-

தேவையானவை:- கோதுமை மாவு – இரண்டரை கப், ஏலத்தூள் – கால் டீஸ்பூன், சர்க்கரை – அரை கப், பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன், பழுத்த வாழைப்பழம் – 1. தண்ணீர் தேவையான அளவு. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கோதுமை மாவில் ஏலத்தூள், சர்க்கரை, பேக்கிங் சோடா போட்டு நன்கு கலக்கவும். பழுத்த வாழைப்பழத்தை நன்கு மாவாக மசித்து கோதுமை மாவில் சேர்த்து நன்கு நீர் தெளித்துப் பிசைந்து மூன்று மணி நேரம் ஈரத்துணி போட்டு ஊறவைக்கவும். மாவு லேசாகப் பொங்கி இருக்கும். எண்ணெயைக் காயவைத்து எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

4.பின்னி:-

தேவையானவை:- வெள்ளை உருண்டை உளுந்து - 2 கப், வெள்ளை ரவை - கால் கப், கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன், மாவா ( இனிப்பில்லாத கோவா ) - ஒன்றரை கப், நெய் - ஒன்றரைகப், பால் - அரை கப், சீனி - 2 கப் , பால் - 2 டேபிள் ஸ்பூன் ( கடைசியில் சேர்த்துப் பிசைந்து அச்சு உருண்டை செய்ய ) ,ஊறவைத்துத் தோலுரித்து குச்சியாகப் பொடித்த பாதாம் - கால் கப். சூர்யகாந்தி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன். உடைத்த பிஸ்தா - 1 டீஸ்பூன். ஏலப் பொடி - அரை டீஸ்பூன்.
செய்முறை :-வெள்ளை உருண்டை உளுந்தைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது சிறிதாக அரை கப் பால் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பானில் பாதி நெய்யைக் காயவைத்து ரவையையும் அதன் பின் கோதுமை மாவையும் போட்டு பொன்னிறமாக ஆகும்வரை நிதானமான தீயில் வறுக்கவும். இதில் மாவாவைப் போட்டு லேசாகச் சிவந்து வரும்வரை கிளறவும். இதில் அரைத்த உளுந்து விழுதையும் போட்டுக் கிளறவும். நிதானமான தீயில் 30 நிமிடம் கிளறியதும் மாவு உருண்டு வரும்போது மிச்ச நெய்யைச் சேர்க்கவும். தொடர்ந்து கிளற மாவு பொன்னிறமாக உதிர்ந்து நன்கு வாசனை வரத் தொடங்கும். அதில் ஏலப்பொடியையும் சீனியையும் சேர்த்துக் கிளறவும். குச்சியாக நறுக்கிய பாதாமையும் 2 டேபிள் ஸ்பூன் பாலையும் கலந்து நன்கு பிசையவும். இதை சமமாகத் தட்டி வட்ட வட்டமான அச்சுகளினால் வெட்டி எடுத்து மேலே சூரிய காந்தி விதைகளையும் பொடித்த பிஸ்தாவும் தூவி பரிமாறவும்.

5.சுக்டி ( வெல்ல பாப்டி) :-

தேவையானவை:- கோதுமை மாவு – 1 கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், நெய் – அரை கப், உடைத்த வேர்க்கடலை – கால் கப், ஏலத்தூள் – ஒரு சிட்டிகை, வெள்ளரி விதை – ஒரு கைப்பிடி.

செய்முறை:- அடிகனமான பாத்திரத்தில் நெய்யை சூடு செய்து கோதுமை மாவைப் போட்டு சிம்மில் கைவிடாமல் பத்து நிமிடம் வரை வறுக்கவும்.தீயை அதிகமாக்கி அடுப்பை அணைத்துவிட்டு அதில் வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறவும். சூட்டில் உருண்டு வரும்போது உடைத்த வேர்க்கடலை, ஏலத்தூள், வெள்ளரி விதை போட்டு நன்கு கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு நிமிடம் கழித்து சதுர வில்லைகள் போடவும். 

6.மலாய் சந்தேஷ்:-

தேவையானவை:- பனீர் – 200 கிராம், கண்டென்ஸ்ட் மில்க் – ஒரு டின், கெட்டிப் பால் – 1 டேபிள் ஸ்பூன், பொடித்த சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், மைதா – அரை டேபிள் ஸ்பூன், பால் – 2 கப், கார்ன் ஃப்ளோர் – 1 டீஸ்பூன், ஏலக்காய் – 2, சில்வர் ஃபாயில் பேப்பர் – 1.

செய்முறை:- பனீருடன் அரை டின் கண்டென்ஸ்ட் மில்க், கெட்டிப் பாலுடன் பொடித்த சர்க்கரை, மைதா சேர்த்து அடித்து அடி கனமான பாத்திரத்தில் போட்டுக் கிண்டவும். 20 நிமிடங்களில் இறுகியதும் இறக்கி கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக உருட்டி லேசாகத் தட்டி ஒரு நெய் தடவிய ட்ரேயில் அடுக்கவும். மலாய் செய்வதற்கு 2 கப் பாலுடன் மிச்ச அரை டின் கண்டென்ஸ்ட் மில்கை ஊற்றிக் கொதிக்க விடவும். ஏலத்தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீரில் கார்ன் ஃப்ளோரைக் கரைத்துச் சேர்க்கவும். மூன்று நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். அடுக்கி இருக்கும் சந்தேஷில் இந்த மலாய்க் கலவையை ஊற்றி சில்வர் பாயில் போட்டு ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.

7.ட்ரைஃப்ரூட் பர்ஃபி:-

தேவையானவை:- விதையில்லா பேரீச்சம்பழம் – 200 கி, உலர்ந்த அத்திப்பழம் – 6, கிஸ்மிஸ் – 1 டேபிள் ஸ்பூன், பாதாம் – கால் கப், முந்திரி – கால் கப், பிஸ்தா – கால்கப், வால்நட் – கால் கப், தேங்காய்ப் பொடி – 2 டேபிள் ஸ்பூன், வெள்ளை எள்ளு – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய்/நெய் – 1 டீஸ்பூன், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்.

செய்முறை:- அத்திப்பழத்தையும் கிஸ்மிஸையும் வெந்நீரில் ஊறவைத்து தோல் இருந்தால் உரித்துக் கொள்ளவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், நான்கையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். அதை எடுத்ததும் பேரீச்சம்பழம், அத்திப்பழம், கிஸ்மிஸைப் போட்டு நைஸாக அரைக்கவும். தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யைக் காயவைத்து வெள்ளை எள்ளைப் பொரிக்கவும்.. பொரிந்ததும் தேங்காப் பொடியைப் போட்டுப் புரட்டவும். இதில் பொடித்த ட்ரை ஃப்ரூட்ஸைப் போடவும். மிதமான தீயில் மூன்று நான்கு நிமிடங்கள் நன்கு புரட்டி அரைத்த பேரீச்சைக் கலவையைப் போடவும். நன்கு கிளறி சுருண்டதும் தட்டில் கொட்டி பர்பியாக துண்டுகள் போடலாம். அல்லது ஒரு தட்டில் போட்டு உருளையாக உருட்டி ஒரு இன்ச் அளவு துண்டுகள் செய்து எடுத்து வைக்கலாம்.

8.ஃப்ரூட்டி ஃபிர்னி:-

தேவையானவை:- பால் – 3 கப்,  அவல் – முக்கால் கப், கார்ன் ஃப்ளோர் – 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், துண்டு  செய்த பழங்கள். – வாழைப்பழம், ஆப்பிள். ஒரு கப்., சில்வர் ஃபாயில் – 1

செய்முறை:- அவலை நன்கு வறுத்துக் கொரகொரப்பாகப் பொடிக்கவும். பாலைக் கொதிக்கவைத்து அதில் அவலைச் சேர்க்கவும்.நன்கு வெந்ததும் கார்ன்ஃப்ளோரைப் பாலில் கரைத்து ஊற்றவும். கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும். ஆறு கப்புகளில் ஊறி ஆறியதும் கெட்டியாக இருக்கும் இதில் துண்டு செய்த பழங்களைப் போட்டு சில்வர் ஃபாயிலால் சுற்றி ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.

9.கம்பு அதிரசம். ( பாஜ்ரா -  சாஜ போரேலு)

தேவையானவை:- கம்பு மாவு – 1 கப், அரிசி மாவு – 1 கப், வெல்லம் – ஒன்றரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கம்புமாவையும் அரிசிமாவையும் சேர்த்துக்கலந்து வைக்கவும். வெல்லத்தில் தண்ணீர் ஊற்றிப் பாகு செய்து மாவில் ஊற்றி ஏலத்தூள் போட்டு இளக்கமாகப் பிசைந்து வைக்கவும். மூன்று மணி நேரம் ஊறியபிறகு எண்ணெயைக் காயவைத்து  எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து மெல்லிய அதிரசங்களாகத் தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

10.ஜோவர் லட்டு. ( சோள லட்டு )

தேவையானவை:- சோளமாவு – 2 கப், நெய் – அரை கப் , நாட்டுச் சர்க்கரை – ஒரு கப், பால் – சிறிது.

செய்முறை:- அடி கனமான வாணலியில் நெய் ஊற்றி சோளமாவைப் போட்டு இளந்தீயில் பத்து நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும். இறக்கும் போது தீயை அதிகப்படுத்தி இறக்கி நாட்டுச் சர்க்கரையைச் சேர்க்கவும். இறக்கி வைத்து நன்கு கிளறினால் சர்க்கரை இளகி வரும். மாவில் எலுமிச்சை அளவு எடுத்து பால் தொட்டு உருண்டைகள் பிடிக்கவும்.


11.சுர்மா லாடு :-
தேவையானவை;- கோதுமை மாவு – ஒன்றரை கப், ரவை – அரை கப், நெய் – 400 கி, கோவா – 150 கிராம், முந்திரி பாதாம் கிஸ்மிஸ் தலா – 50 கிராம். போரா – 400 கி,

செய்முறை:- கோதுமை மாவு, ரவையைக் கலந்து நூறுகிராம் நெய்யை உருக்கி ஊற்றி தண்ணீர் தெளித்துப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். நெய்யைக் காயவைத்து எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து கனமான தட்டை போல் தட்டிப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கோவாவையும் நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கி முந்திரி பாதாம் கிஸ்மிஸைப் பொரித்து அதிலேயே கோவா, கோதுமை மாவு பொடித்தது, போரா ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி உருண்டைகள் பிடிக்கவும்.

12.மில்கி நெஸ்ட்.:-

தேவையானவை:- புழுங்கலரிசி மாவு – ஒரு கப், மைதாமாவு – ஒரு கப், கண்டென்ஸ்ட் மில்க் – ஒன்றரை கப், நெய் – 2 கப், தோலோடு குச்சியாக நறுக்கிய பாதாம் – 2 டேபிள் ஸ்பூன், தோலுரித்த பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன், டூட்டி ஃப்ரூட்டி – 4 டேபிள் ஸ்பூன். தோலுரித்த அக்ரூட் - 20

செய்முறை:- புழுங்கல் அரிசி மாவையும் மைதாமாவையும் கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றிப் பிசையவும். ஓமப்பொடி அச்சில் மாவை நிரப்பிக் கொள்ளவும். நெய்யைக் காயவைக்கவும். குழிவான காய்கறிக் கரண்டியில் பிழிந்து காயும் நெய்யில் கரண்டியோடு வேகவிடவும்.இன்னொரு குழிக்கரண்டியால் அழுத்தியபடி வேகவைத்து எடுத்து கூடுபோல கழட்டி வைக்கவும். இது போல எல்லா மாவையும் கூடு போல வேகவைத்து எடுத்து வைக்கவும். சாப்பிடும் போது கண்டென்ஸ்ட் மில்கை இரண்டு டீஸ்பூன் கூட்டின் உள்ளே தடவி அக்ரூட் வைத்து அதைச் சுற்றி சிறிது டூட்டி ஃப்ரூட்டி, பிஸ்தா, குச்சியாக நறுக்கிய பாதாம் தூவிக் கொடுக்கவும்.

13.ஃப்ரூட் & நட்ஸ் கச்சோரி

தேவையானவை:- மைதா – 2 கப், நெய் – கால் கப், பேரிச்சை, கிஸ்மிஸ், டூட்டி ஃப்ரூட்டி – ஒரு கப், பாதாம் பிஸ்தா முந்திரி வறுத்து சின்னமாக ஒடித்தது ஒரு கப், தேன் – ஒரு டேபிள் ஸ்பூன். பொறிக்க – எண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு.

செய்முறை:- மைதாவில் நெய்யை உருக்கி ஊற்றி தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாகப் பிசைந்து பதினைந்து நிமிடம் ஊறவைக்கவும். பேரீச்சையைப் பொடியாக நறுக்கி கிஸ்மிஸ் டூட்டி ஃப்ரூட்டி, சின்னமாக ஒடித்த பாதாம் பிஸ்தா முந்திரியுடன் சேர்த்து தேனைக் கலந்து வைக்கவும். மைதாவில் எலுமிச்சை அளவு எடுத்து கனமான கப் செய்து அதில் இந்த ஃப்ரூட் & நட்ஸ் கலவையை வைத்து மூடி கையாலேயே கனமான பூரி போல உள்ளங்கை அகலத்துக்குத் தட்டவும். எண்ணெய் அல்லது நெய்யைக் காயவைத்துப் பொரிக்கவும்.


14. பிங்க் கத்லி :-

தேவையானவை:- பீட்ரூட் – 2, கேரட் – 1, முந்திரி – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப்.

செய்முறை:- பீட்ரூட்டையும் கேரட்டையும் தோல் சீவி சன்னமாகத் துருவவும். முந்திரியை அப்படியே பொடிக்கவும். கால் கப் நெய் விட்டு பீட்ரூட் கேரட்டைப் பச்சை வாசம் போக வதக்கி இறக்கவும். முந்திரி சர்க்கரை கேரட் பீட்ரூட்டைச் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பில் வைத்துக் கிளறவும். ஒன்று சேர்த்ததும் மிச்ச நெய்யை ஊற்றி நன்கு உருட்டிக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி டைமண்ட் ஷேப்பில் மெல்லிய வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.

15.சாக்லெட் அக்ரூட் பர்ஃபி

தேவையானவை:- அக்ரூட் – 1 கப், சர்க்கரை – முக்கால் கப், தண்ணீர் – 1 கப், ட்ரிங்கிங் சாக்லெட் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- அக்ரூட்டை தோலுரித்து கொரகொரப்பாக பொடி செய்யவும். சர்க்கரையில் தண்ணீரை ஊற்றிப் பாகு வைக்கவும். பாகு கெட்டியானதும் ட்ரிங்கிங்க் சாக்லெட்டைத் தூவிக் கலந்து அதன் பின் அக்ரூட்டைக் கொட்டிக் கிளறவும். பாகு இறுகும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.

16.மல் பூரி :-

தேவையானவை:- மைதா – 2 கப், அரிசி மாவு – கால் கப், தயிர் – 1 கப், கேசரித்தூள் – ஒரு சிட்டிகை, சர்க்கரை – இரண்டரை கப், பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை, நெய் – பொரிக்கத் தேவையான அளவு, பாதாம் முந்திரி, பிஸ்தா – ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்தது.

செய்முறை:- மைதாவையும் அரிசிமாவையும் கலந்து பேக்கிங் பவுடர் போட்டு சலிக்கவும். இதில் தண்ணீர் ஊற்றிக் கட்டியில்லாமல் தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். சர்க்கரையைப் பாகு வைத்துக் கேசரித்தூளைச் சேர்க்கவும். நெய்யைக் காயவைத்து பணியாரங்களாக ஊற்றி அதைச் சீனிப்பாகில்  போடவும். நன்கு ஊறியதும் எடுத்து அதன் நடுவில் கால் டீஸ்பூன் முந்திரி பாதாம் பிஸ்தா பொடித்ததைச் சேர்க்கவும்.

17.ஆக்ரா ஸ்வீட் – அங்கூரி பேடா.

தேவையானவை:- பூசணிக்காய் – பாதி, சர்க்கரை – 3 கப், சோடாப்பூ – கால் டீஸ்பூன், தண்ணீர் – 2 கப். குங்குமப் பூ – 1 சிட்டிகை, பொடித்த தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன். 

செய்முறை:- பூசணிக்காயைத் தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கி சோடாப்பூ போட்டு நன்கு பிரட்டி தண்ணீரைப் பிழிந்து வைக்கவும். சர்க்கரையைத் தண்ணீரில் போட்டு பாகு காய்ச்சவும். இதில் பூசணிக்காய்த் துண்டுகளைப் பிழிந்து போட்டு வேகவிடவும். குங்குமப்பூவையும் போட்டு நன்கு வெந்து பாகு சுண்டியதும் இறக்கி அங்கூரி பேடாவைத் தேங்காய்ப் பொடியில் புரட்டி வைக்கவும்.

18.ஸேப் பாதாம் அல்வா :-

தேவையானவை :- ஆப்பிள் – 2, பாதாம் – 1 கப், சர்க்கரை – 1 கப், நெய் – 1 கப், கிராம்பு – 1, ஏலக்காய் – 2 பொடிக்கவும், கண்டென்ஸ்ட் மில்க் – 1 கப். குங்குமப் பூ – 1 சிட்டிகை.

செய்முறை:- பாதாமை வெந்நீரில் இரண்டு நிமிடங்கள் ஊறவைத்துத் தோலுரித்து கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து அரைக்கவும். ஆப்பிளைத் தோல் சீவித் துருவி சிறிது நெய்யில் வதக்கி சர்க்கரை சேர்க்கவும். இதில் பாதாம் விழுதையும் போடவும். நன்கு சுருண்டு வெந்து வரும்போது கிராம்பையும் பொடித்த ஏலக்காயையும் சேர்த்து நெய்யை உருக்கி சிறிது சிறிதாக ஊற்றியபடி கிளறவும். அடுப்பை அணைத்துவிட்டு மிச்ச நெய்யையும் உருக்கி ஊற்றிக் கிளறி ஒட்டாத பதம் வந்ததும் குங்குமப்பூவைப் போட்டுப் பரிமாறவும்.

19. ஃபார்சி பூரி (பில்லாலு).

தேவையானவை;- மைதா – 1 கப், நெய் – 3 டீஸ்பூன், பால் – 5 டீஸ்பூன், தண்ணீர் – 6 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை – கால் கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பெரிய தட்டில் நெய்யைப் போட்டு நன்கு உரசவும். அதில் மைதாவையும் போட்டு நன்கு கலக்கவும். அதில் பாலும் தண்ணீரும் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பெரிய சப்பாத்தியாகத் தேய்த்து பாட்டில் மூடியால் குட்டி குட்டி பூரியாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் பொடித்த சர்க்கரையில் புரட்டி வைக்கவும்.

20. சீஸ் வெஜ் பால்ஸ்:-

தேவையானவை:- மைதா – ஒரு கப் , சீஸ் ஸ்ப்ரெட் – 2 டேபிள் ஸ்பூன், உருளை – 2, காரட்- 1, காலிஃப்ளவர் – 6 பூ, பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் 1, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- மைதாவில் சீஸ் ஸ்ப்ரெட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் அவித்த உருளைக்கிழங்கு, அவித்த பச்சைப்பட்டாணி, துருவிய காலிஃப்ளவர், துருவிய கேரட், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பொடியாக அரிந்த கொத்துமல்லித் தழை போட்டு நன்கு பிசையவும். உருண்டைகளாக உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

21.மாத்ரி :-

தேவையானவை:- ஆட்டா – 1 கப், மைதா – 1 கப், பேக்கிங் சோடா – 1 சிட்டிகை, உப்பு – 2 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், தயிர் – 2 டேபிள் ஸ்பூன், வெந்நீர் – 8 டேபிள் ஸ்பூன், நெய் – உருக்கியது 5 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை;- மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்து ஒரு பௌலில் போடவும்.அதில் உப்பு, ஆட்டா, மைதா, பேக்கிங் சோடா, நெய் போட்டு நன்கு கலக்கவும். தயிரையும் சேர்த்து நன்கு கலக்கி வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகப் பிசையவும். 30 நிமிடம் ஊறவிடவும். எண்ணெயைக் காயவைத்து எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து கனமான தட்டைகளாகத் தட்டி ஒரு ஃபோர்க்கால் குத்தி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

22.டிக்கா கதியா

தேவையானவை:- கடலை மாவு – ஒன்றரை கப், ஓமம் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், சமையல் சோடா- ஒரு சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, தண்ணீர் – கால் கப்.

செய்முறை:- கடலை மாவில் ஓமம்,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சமையல் சோடா உப்பு ஒரு டீஸ்பூன் எண்ணெய் போட்டு நன்கு கலக்கவும். இதில் தண்ணீரைத் தெளித்துப் பிசையவும். சிறிது எண்ணெய் தொட்டு நன்கு பிசைந்து வைக்கவும். மகிழம்பூ அச்சில் போட்டு எண்ணெயைக் காயவைத்துப் பிழிந்து பொன்னிறமாகப் பொரித்தெடுத்து லேசாக உடைத்து வைக்கவும்.

23. மிக்ஸ்ட் வெஜ் முதியா :-

தேவையானவை:- முட்டைக்கோஸ், காரட், பாலக், பெரியவெங்காயம் – தலா கால் கப், சுரைக்காய் துருவியது -1 கப், கோதுமை மாவு ஒன்றரை கப்,கடலை மாவு – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 பொடியாக அரிந்தது, எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி பொடியாக அரிந்தது.எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு , எள்ளு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- சுரைக்காயைப் பிழிந்து போட்டு காய்கறி கீரை, வெங்காயம் பச்சை மிளகாய் கடலை மாவு, கோதுமை மாவு உப்பு சீனி, மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு கலந்து நன்கு பிசைந்து நீளமாக உருட்டி ஆவியில் ஒரு மணி நேரம் வேகவைக்கவும். ஆறியதும் ஒரு இஞ்ச் துண்டுகளாக வட்ட வட்டமாக வெட்டவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, எள்ளு தாளித்து இந்த முதியாக்களைப் போட்டுக் கலக்கிவிடவும்.

24.ஆலு புஜியா :-

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 3 வேகவைத்து உரித்து மசித்தது. கடலை மாவு – அரை கப், உப்பு, மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- உருளைக்கிழங்குடன் கடலை மாவு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாகப் பிசையவும். எண்ணெயை மிதமாகக் காயவைக்கவும். ஓமப்பொடி அச்சில் எண்ணெய் தடவி மாவைப் போட்டு வட்டமாகப் பிழிந்து மஞ்சள் கலரிலேயே வேகவைத்து எடுத்து வைத்து லேசாக நொறுக்கி விடவும்.

25.கட்டா மீட்டா நம்கின் :-

தேவையானவை:-அவல்- இரண்டு கப், சாட் மசாலா – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, கடுகு – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய்- 5, கருவேப்பிலை – 10 இணுக்கு, குச்சியாகக் கீறிய தேங்காய் – கால் கப், வேர்க்கடலை, பொட்டுக்கடலை – தலா அரை கப், பொடித்த சர்க்கரை – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:- ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, பெருங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை தேங்காய் போட்டு நன்கு வதக்கவும். இதில் மஞ்சள் பொடி போட்டு வேர்க்கடலை பொட்டுக் கடலையைச் சேர்க்கவும். உப்பையும் அவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கும்போது சாட் மசாலாவும் பொடித்த சர்க்கரையையும் தூவி இறக்கவும்.

26.ரிங் முறுக்கு:- செகோடிலு.

தேவையானவை:- அரிசி மாவு – ஒன்றரை கப், தண்ணீர் – ஒன்றரை கப், உளுந்தமாவு – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், எள்ளு – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பாசிப்பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊறப்போடவும். ஒரு பௌலில் அரிசிமாவையும் உளுந்தமாவையும் போடவும். ஒரு பானில் ஒன்றரை கப் நீரைக் கொதிக்கவைத்து அதில் உப்பு, வெண்ணெய், பாசிப்பருப்பைப் போடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் மாவைச் சிறிது சிறிதாகத் தூவியபடி கலந்து நன்கு சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும்.மாவு ஆறியதும் அதில் சீரகம், எள்ளு, மிளகாய்த்தூள், பெருங்காயம் போட்டுத் திரும்பப் பிசையவும். பத்து நிமிடம் ஊறவிடவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து திரி போல் உருட்டி இரண்டு முனைகளையும் ஒட்டி சின்ன வளையல் போல செய்து கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

27.தினை தேன்குழல்.:-

தேவையானவை:- தினை மாவு – அரை கப், அரிசி மாவு – அரை கப், பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. வெதுவெதுப்பான தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை:- தினை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவை ஒரு பௌலில் போட்டு சீரகம், பெருங்காயம் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து மென்மையாகப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து மாவைத் தேன்குழல் அச்சில் போட்டுப் பிழிந்து வெள்ளை வெளேரென்று மொறுமொறுப்பானதும் எடுக்கவும்.

28.சிப்பி சோஹி (உப்பு ) :-

தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், உப்பு – அரை டீஸ்பூன், சீப்புச் சீடைக் கட்டை – 1. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவைக் கலந்து வைக்கவும். தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி உப்பு சேர்த்து இறக்கவும் மாவில் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையவும். சீப்புச்சீடைக் கட்டையில் சிப்பிகளாகத் தட்டி வைக்கவும். எண்ணையைக் காயவைத்து அதில் போடும்போது சிப்பிகளை லேசாக மடக்கிப் போடவும். நன்கு பொறுபொறுவென வெந்ததும் இறக்கவும்.  

29.சேவ் சோளாஃபலி:-

தேவையானவை:- கடலை மாவு – 1 கப், உளுந்து மாவு – கால் கப், பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை, எண்ணெய் – 1 டீஸ்பூன் , பொறிக்கத் தேவையான அளவு, உப்பு – அரை டீஸ்பூன், தண்ணீர் – கால் கப், வரமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கருப்பு உப்பு – 1 டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் – 2 டீஸ்பூன். சிறு சில்வர் உரல் + உலக்கை செட் – 1

செய்முறை:- கால் கப் தண்ணீரை சுடவைத்து உப்பு எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். கடலை மாவு உளுந்த மாவு பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலந்து வைக்கவும் இதில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றிப் பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும். இதை உரலில் சிறிது எண்ணெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக இடித்து மென்மையாக கலர் வெளிராக மாறும்வரை இடித்து வைக்கவும். பூரியாகத் தேய்த்து செவ்வகமாக ரிப்பன் போல வெட்டி எண்ணெயில் பொரிக்கவும். கறுப்பு உப்பு,  ஆம்சூர் பவுடர், மிளகாய்த்தூளை நன்கு கலந்து இதில் தூவி பரிமாறவும்.

30.குழலப்பம்:-

தேவையானவை:- அரிசி மாவு – 1கப், சின்னவெங்காயம் – 3, பூண்டுப் பல் – 1, சீரகம் – அரை டீஸ்பூன், கறுப்பு எள்ளு – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், தண்ணீர் – கால் கப் + 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு. சில்வர் குழல்கள் – 4

செய்முறை:- சீரகம், சின்னவெங்காயம், பூண்டு இவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு பானில் கால் கப் தண்ணீரை உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி வைக்கவும். ஒரு பௌலில் அரிசி மாவு , எள், அரைத்த சீரகக் கலவை போட்டு நன்கு கலந்து கொதிக்க வைத்த நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து ஈரத்துணி கொண்டு மூடி பத்து நிமிடம் வைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைக்கவும். ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்டில் எலுமிச்சை அளவு மாவை எடுத்து வட்டமாகத் தட்டி சில்வர் குழலில் சுற்றி ஒட்டி அதைக் காயும் எண்ணெயில் மெதுவாக விடவும். இதுபோல பானின் சைஸுக்கு ஏற்றவாறு மூன்று நான்கு சில்வர் குழல்களில் மாவை ஒட்டிப் போடலாம். எல்லாப் பக்கமும் திருப்பிவிட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஒரு குச்சியால் குழலில் இருந்து எடுத்துப் பரிமாறவும். 




டிஸ்கி:- இந்தக் கோலங்களும் ரெசிப்பீஸும் ம்பர் 3, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

ிஸ்கி 2:- நத்ிரி ரெசிப்பைப் பாராட்டிய ுமம் பக்ி ஸ்பல் வர்கள் - கே. ஏ. நிவாயம், பங்கூரு, சுசீலா, பெரியாயக்கன் பாளையம், அ.பி. இளங்கோ, பிராசுரம், மிலை. கோபி, சென்ன- 83 . ஆகியோருக்கு நன்றி. !. இிய ீபஒளித் ிருநாள் வாழ்த்ுகள் அனைவுக்கும்.!!! வாழ்குடன் :)   
. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...