எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 டிசம்பர், 2016

பிள்ளையார் முதல் அனுமன் வரை சிறப்பு பிரசாதங்கள். GANAPATHI - HANUMAN.

1.விநாயகர்

வரகரிசி வெல்லக் கொழுக்கட்டை

தேவையானவை:- வரகரிசி – 2 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – 1 சிட்டிகை. உப்பு - 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- வரகரிசியையும் பாசிப்பருப்பையும் லேசாக வறுத்துக் களைந்து காயவைத்து கொழுக்கட்டை மாவு பதத்தில் பொடித்து வைக்கவும். வெல்லத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிப் பாகுவைத்து வடிகட்டி மாவில் சேர்த்து தேங்காய்த்துருவல் போடவும். உப்பும், ஏலத்தூளும் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும். ஆறியதும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.

பச்சைப் பயறு அடை:-

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பாசிப்பயறு – 1 கப், பச்சை மிளகாய்- 2, இஞ்சி – 1 இன்ச் துண்டு, கொத்துமல்லி – 1 கைப்பிடி, தேங்காய்த் துருவல், காரட் துருவல் – தலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு- அரை டீஸ்பூன், எண்ணெய்- 50 மில்லிகிராம்.

செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பயறையும் தனித்தனியாக ஊறவைக்கவும். ( பாசிப்பயறை முளை கட்டியும் உபயோகிக்கலாம். ). பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, கொத்துமல்லித் தழை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதில் தேங்காய், காரட் துருவல் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தோசைக்கல்லில் அடையாகத் தட்டி எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பானதும் எடுத்து நிவேதிக்கவும்.

2.முருகன்

தினை சப்போட்டா பாயாசம் :-

தேவையானவை:- தினை – 1 கப், பால் அரை – லிட்டர், சப்போட்டா – 2, சர்க்கரை – அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், பாதாம் , முந்திரி, கிஸ்மிஸ் – தலா 6

செய்முறை:- தினையை லேசாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். பாலைக் காய்ச்சவும். இதில் சிறிது எடுத்து ஆறவைக்கவும். சப்போட்டாவைத் தோலுரித்து கையால் மசித்து இந்தப்பாலில் சேர்க்கவும். மீதிப் பாலில் தினை மாவைப் போட்டு நன்கு கிளறி கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். நெய்யில் குச்சியாக நறுக்கிய பாதாம் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும். ஆறியபின் இதில் சப்போட்டா கரைத்த பாலை ஊற்றி ஏலப்பொடி போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.

அவல் புரத போகா:-

செய்முறை:- அவல் – 2 கப், கடலைப்பருப்பு – 1 டேபிள்பூன், வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, ஜவ்வரிசி- 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, உப்பு – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து- 2 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன். எண்ணெய்- 3 டீஸ்பூன்.

செய்முறை:- எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இது சிவந்ததும் ஜவ்வரிசியைப் போட்டுப் பொரிந்ததும், வட்ட வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாயைச் சேர்க்கவும், கருவேப்பிலையைப் போட்டு சீனி உப்பைச் சேர்த்து கொப்பரைத் துருவல், அவலைச் சேர்த்துப் புரட்டவும். நன்கு புரட்டி இறக்கி நிவேதிக்கவும்.

3.சிவன்

சீரகசம்பா கல்கண்டுப் பொங்கல்.

தேவையானவை:- சீரகச் சம்பா அரிசி – 1 கப். பால் – 1 கப், கல்கண்டு – முக்கால் கப், நெய்- அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 20.

செய்முறை:- சீரகச்சம்பா அரிசியைக் களைந்து சிறிது நெய்யில் வறுத்து ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் குக்கரில் வேகவிடவும். இறக்கி நன்கு மசித்து கற்கண்டைப் பொடியாக்கிச் சேர்க்கவும். கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஏலத்தூள் போட்டு மிச்ச நெய்யில் முந்திரி கிஸ்மிஸை பொரித்துப் போட்டு நிவேதிக்கவும்.

இருபருப்பு வடை.

தேவையானவை:- கடலைப்பருப்பு – 1 கப், வெள்ளை உருண்டை உளுந்தம் பருப்பு -1 கப், பச்சைமிளகாய் – 2, வரமிளகாய்- 2, கருவேப்பிலை, கொத்துமல்லி – தலா ஒரு கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கடலைப்பருப்பையும் உளுந்தம் பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் பச்சைமிளகாய், வரமிளகாயை உப்பு சேர்த்து அரைத்து உளுந்தையும் கடலைப்பருப்பையும் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அதில் கருவேப்பிலை கொத்துமல்லியைப் பொடியாக அரிந்து போட்டு இளக்கமாகத் தட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்து நிவேதிக்கவும்.


4.பெருமாள்

அமிர்த கலசம்:-

தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய் – கால்கப்.

செய்முறை:- வெல்லத்தை இளம் பாகு வைத்து சீரகம்,மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போடவும். நெய்யைக் காய்ச்சி ஊற்றி பச்சரிசி மாவைப் போட்டு நன்கு கலக்கவும். சிறிதுநேரம் ஊறியவுடன் சிறு டம்ளர்களில் நெய் தடவி மாவை நிரப்பி வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.

சிறுதானிய அப்பம்:-

தேவையானவை:- வரகு, சாமை, தினை , கம்பு, கேழ்வரகு மாவு – தலா கால் கப், வெல்லம் – 1 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் –பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: எல்லா மாவையும் லேசாக வறுத்து ஏலத்தூள் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். வெல்லத்தைப் பாகு வைத்து மாவில் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது நேரம் ஊறியபின் எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாக ஊற்றி நிவேதிக்கவும்.


5.கிருஷ்ணர்

கவுனரிசி லட்டு:-

தேவையானவை:- கவுனரிசி மாவு – 1 கப், பொட்டுக்கடலை மாவு -1 கப், பாதாம் பொடி – அரை கப் , தூள் வெல்லம் – ஒன்றரை கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, முந்திரி 10.

செய்முறை:- முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். சிறிது நெய்யில் கவுனரிசி மாவை வாசம் வரும்வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து சூட்டிலேயே பொட்டுக்கடலை மாவு, பாதாம் பொடி, தூள் வெல்லத்தைச் சேர்க்கவும். ஏலப்பொடி போட்டு நெய்யை உருக்கி ஊற்றி லட்டுகளாக உருண்டைகள் பிடிக்கவும்.

சன்னா பகோடா :-

தேவையானவை:- வெள்ளைக் கொண்டைக் கடலை – 1 கப், சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – 1 இன்ச் துண்டு, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, கொத்துமல்லித்தழை – சிறிது, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- வெள்ளைக் கொண்டைக் கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நீரை வடித்து சீரகம் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். இதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழைபோட்டுப் பிசைந்து எண்ணெயைக்காயவைத்து பகோடாக்களாகப் பொரித்து எடுத்து நிவேதிக்கவும்.

6.ராமர்

பாசிப்பருப்பு போளி.:-

தேவையானவை:- மைதா – 2 கப், பாசிப்பருப்பு – முக்கால் கப், சன்ன தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – ஒரு கப், நெய் – அரை கப். உப்பு – 1 சிட்டிகை. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை. பச்சரிசி மாவு – 2 டீஸ்பூன்.

செய்முறை: மைதாவில் மஞ்சள்தூள், உப்பு போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்து எண்ணெயில் இரண்டு மணி நேரம் ஊறப்போடவும்.பாசிப்பருப்பை நறுக்குப் பதத்தில் வேகவைத்து தேங்காய்த்துருவலும் சர்க்கரையும் சேர்த்து அரைக்கவும். இதில் ஏலத்தூள், பச்சரிசி மாவு சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும். மைதாவில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துத் தட்டி அதில் பாசிப்பருப்புப் பூரணத்தை வைத்து எண்ணெய் தொட்டு போளியாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு வேகவைத்து நிவேதிக்கவும்.


ஓட்ஸ் காரட் குழிப்பணியாரம், :-

செய்முறை:- பச்சரிசி, புழுங்கல் அரிசி, ஓட்ஸ் – தலா ஒரு கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – 2 டீஸ்பூன், காரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் – 3, இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு, கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி அளவு. தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய்- 100 மிலி.

செய்முறை:- பச்சரிசி புழுங்கல் அரிசி, உளுந்து வெந்தயத்தைத் தனித்தனியாக ஊறவைத்து வெந்தயம் அரிசி உளுந்து என்ற வரிசைப்படி அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும். ஓட்ஸைப் பொடிசெய்யவும். எண்ணெயில் கடுகு, காரட் துருவல், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை, உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும். நன்கு கலக்கி அப்படியே வைத்திருந்து சிறிது நேரம் கழித்து குழிப்பணியாரக் கல்லில் குழிப்பணியாரங்கலாக ஊற்றவும்.

7.அனுமான்

வாழைப்பழ அல்வா.

தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – 1 சிட்டிகை, முந்திரி – 10

செய்முறை:- நெய்யில் முந்திரியை வறுத்து வைக்கவும். ரவையை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். வாழைப்பழத்தைத் தோலுரித்துத் துண்டுகள் செய்து நெய்யில் வறுக்கவும். நன்கு மசித்து ரவையும் பாலும் சேர்த்து வேகவிடவும்.நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் நெய் விட்டு நன்கு சுருளக் கிளறி ஏலத்தூளும் முந்திரியும் சேர்த்து இறக்கி நிவேதிக்கவும். 

கறுப்பு முழுஉளுந்து சுண்டல். :-

தேவையானவை:- கறுப்பு முழு உளுந்து – 1 கப், பச்சை மிளகாய் – 2, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, இஞ்சி – 1 இன்ச் துண்டு, எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா 1 டீஸ்பூன் , வரமிளகாய் – 1. உப்பு – கால் டீஸ்பூன். 

செய்முறை:- கறுப்பு முழு உளுந்தை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.  எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து கருவேப்பிலை, பொடியாக அரிந்த இஞ்சி பச்சை மிளகாய் சேர்க்கவும். இதில் வேகவைத்த கறுப்பு உளுந்தைப் போட்டு உப்பு சேர்க்கவும். இரு நிமிடங்கள் நன்கு கிளறியபின் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கி நிவேதிக்கவும்.

8.ஹயக்ரீவர்

ஹயக்ரீவா மட்டி :-

தேவையானவை:- கடலைப்பருப்பு – 1 கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – 1 சிட்டிகை, பாதாம் , முந்திரி, கிஸ்மிஸ் – தலா 10. நெய் – கால் கப்.

செய்முறை:- கடலைப்பருப்பைக் கழுவி குக்கரில் வேகவைக்கவும். வெந்த கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக மசிக்கவும். வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி வெல்லம் கரைந்து சேர்ந்து லேசாக உருண்டதும் இறக்கவும். நெய்யில் முந்திரி, பாதாம், கிஸ்மிஸை வறுத்துப் போட்டு ஏலத்தூள் தேங்காய்த்துருவல் சேர்த்து அலங்கரித்து நிவேதிக்கவும்.

குருணை மிளகு உப்புமா.

தேவையானவை:- பச்சரிசிக் குருணை – 2 கப், மிளகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:- ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். மிளகை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு , உளுந்து, கருவேப்பிலை,பொடித்த மிளகைத் தாளித்து பச்சரிசிக் குருணையைப் போட்டு வறுக்கவும். இதில் கொதித்த தண்ணீரை விட்டுக் கிளறி உப்பு சேர்த்து மூடிபோட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வேகவிடவும். அதன் பின் திறந்து நன்கு கிளறி உதிராக ஆனதும் இறக்கி நிவேதிக்கவும். 

9.நரசிம்மர்

கரும்புச்சாறு பானகம் :-

தேவையானவை:- கறும்புச்சாறு – 2 கப், எலுமிச்சை சாறு – சில சொட்டுகள், சுக்குத்தூள் – 1 சிட்டிகை, ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை. தண்ணீர் – 2 கப்.

செய்முறை:- கரும்புச்சாற்றை துணியில் வடிகட்டவும். கரும்புச்சாற்றில் எலுமிச்சைச் சாறு, சுக்குத்தூள், ஏலத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து நிவேதிக்கவும்.


கடலைப்பருப்பு கோஸம்பரி :-

தேவையானவை:- கடலைப்பருப்பு – 1 கப், பொடியாக அரிந்த வெள்ளரிக்காய்- 1 கப், தேங்காய்த்துருவல் – அரை கப், பச்சை மிளகாய் – 2, எலுமிச்சை – அரை மூடி, கொத்துமல்லி கருவேப்பிலை – 1 கைப்பிடி, உப்பு – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை:- கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். இதில் பொடியாக அரிந்த வெள்ளரி, தேங்காய்த்துருவல், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெயில் கடுகைத் தாளித்துக் கொட்டவும்.


10.பைரவர்

பாதாம் பழப் பச்சடி:-

தேவையானவை:- பால் – 2 கப், பாதாம் 10, சர்க்கரை- கால் கப், வாழைப்பழம் – 2, மாம்பழம்- பாதி, ஆப்பிள் – 1, சீதாப்பழம் – 1, சப்போட்டா – 1, பலாச்சுளை- 4, பேரீச்சை – 4, தேன் ஒரு டேபிள் ஸ்பூன், கிஸ்மிஸ் – 20. குங்குமப் பூ – 1 சிட்டிகை.

செய்முறை:- பாதாமை வெந்நீரில் ஊறவைத்துத் தோலுரித்து லேசாக அரைத்து பாலில் வேகவிடவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் குங்குமப் பூவையும் கால் கப் சர்க்கரையையும் சேர்த்துக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். வாழைப்பழம், மாம்பழம், ஆப்பிள், சீதாப்பழம், சப்போட்டா பலாச்சுளை, பேரீச்சை ஆகியவற்றை சிறு சதுரங்களாக வெட்டி ஆறிய பாதாம் பாலில் போடவும். தேனையும் கிஸ்மிஸையும் சேர்த்துக் கலக்கி நிவேதிக்கவும்.

பகாளாபாத் ;-

தேவையானவை ;-
சாதம் – 2 கப், புது தயிர் - 100 மிலி, பால் – 2 கப், உப்பு - 1/4 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 1, கறிவேப்பிலை - 1 இணுக்கு, இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை. பொடியாக அரிந்த கேரட், வெள்ளரிக்காய், கொத்துமல்லித்தழை – தலா ஒரு டீஸ்பூன், சிவந்த மாதுளை முத்துகள் – 1 கைப்பிடி., கிஸ்மிஸ், முந்திரி – தலா 10.

தயாரிப்பு :-
சாதத்தை குழைய மசித்து தயிரும் உப்பும் சேர்க்கவும்.பாலையும் வெண்ணெயையும் சேர்க்கவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணை காயவைத்து கடுகு., ஜீரகம் போட்டு வெடித்ததும்., பெருங்காயம் சேர்த்து., பச்சை மிளகாய்., கறிவேப்பிலை., இஞ்சி., தாளித்து சாதத்தில் கொட்டி நன்கு பிசையவும்.முந்திரியையும் கிஸ்மிஸையும் பொரித்துப் போட்டு துருவிய வெள்ளரி, கொத்துமல்லித்தழை, மாதுளை முத்து சேர்த்துக் கலக்கி நிவேதிக்கவும்.


11.ஐயப்பன்


உன்னியப்பம்

தேவையானவை:- பச்சரிசி – 1 கப், வெல்லம் – 1 கப், பழுத்த வாழைப்பழம் – 2, பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை, தேங்காய் – கால் மூடி, நெய் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். அதை கிரைண்டரில் அரைத்து வாழைப்பழமும் வெல்லமும் போட்டு அரைக்கவும். தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி சிறிது நெய்யில் வதக்கி மாவில் கொட்டி பேக்கிங் பவுடர், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் வைத்திருக்கவும். உன்னியப்பம் செய்யும் கல்லில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் ஸ்பூனால் மாவை ஊற்றி வேகவைத்து திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து நிவேதிக்கவும்.

அரவணைப் பாயாசம்.

தேவையானவை:- சிவப்பு கேரளா மட்டையரிசி/பாசுமதி அரிசி – கால் கப், மண்டை வெல்லம் – 1 கப் துருவியது , நெய் – 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை, தேங்காய்ப் பல் – 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – ஒரு கப்

செய்முறை:- அரிசியைக் களைந்து வைக்கவும். வெல்லத்தில் சிறிது நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி வைக்கவும். நெய்யில் தேங்காயைப் பொன்னிறமாக வறுக்கவும். மிச்ச நெய்யில் அரிசியை லேசாக வறுத்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிறிது வெந்ததும் வெல்லப்பாகைச் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் நெய்யில் வதக்கிய தேங்காய்த்துண்டுகள் ஏலப்பொடி சேர்த்து இறக்கி நிவேதிக்கவும். 

12.நடராஜர்

ரவைப் புட்டு:-

தேவையானவை :- வெள்ளை ரவை - 1 கப், பால் - 2 கப், ஜீனி - 1 கப், நெய் - 1/2 கப், துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய் – 2, முந்திரிப் பருப்பு – 10.

செய்முறை:- ஒரு பானில் நெய்யை ஊற்றி சூடாக்கி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு வெதுப்பி சூடான பாலை ஊற்றி சமைக்கவும். ரவை வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகையும்., ஜீனியும் சேர்க்கவும். ஜீனி கரைந்தவுடன் அதில் தேங்காயை சேர்க்கவும். நன்கு இறுகி பக்கங்களில் நெய் பிரியும் போது பொடித்த ஏலக்காயை சேர்த்து இறக்கி நிவேதிக்கவும்.

உளுந்துக் களி.

தேவையானவை :- வறுத்து அரைத்த உளுந்து மாவு – 1 கப், வெல்லம் துருவியது – கால் கப், கருப்பட்டி துருவியது – அரை கப், உப்பு – 1 சிட்டிகை, பால் – 1 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- வெதுவெதுப்பான பாலில் உளுந்து மாவைக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். மாவு திரண்டு வரும்போது உப்பு, துருவிய வெல்லம், கருப்பட்டி சேர்க்கவும். நன்கு சேர்ந்து திரண்டதும் நெய்யை ஊற்றவும். தொட்டால் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி நிவேதிக்கவும். 

பாபா

முக்கனிப் பாயாசம்:-

தேவையானவை:- மாம்பழம்- 1, வாழைப்பழம் – 2, பலாச்சுளை – 4. பால் – 1 லிட்டர், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – முக்கால் கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, பழ எசன்ஸ் – சில சொட்டுகள், பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 5, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- பழங்களைத் தோல் சீவி கொட்டை நீக்கி சதுரத் துண்டுகள் செய்து சிறிது சர்க்கரையில் புரட்டி வைக்கவும். பாதாம் முந்திரி கிஸ்மிஸை நெய்யில் வறுத்து வைக்கவும். அதே நெய்யில் அரிசிமாவைப் போட்டுப் புரட்டி பால் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும். பழத்தில் பாதியை லேசாக மசித்து பாலில் சேர்க்கவும். ஆறியதும் பழத்துண்டுகள், நெய்யில் வறுத்த பாதாம் முந்திரி, கிஸ்மிஸ், ஏலத்தூள் பழ எசன்ஸ் போட்டு நன்கு கலந்து நிவேதிக்கவும்.


ஆரஞ்சு இனிப்பு ரொட்டி

தேவையானவை:- கோதுமை மாவு – 1 கப், ஆரஞ்சு சாறு – ஒரு கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- கோதுமை மாவில் உப்பு, சர்க்கரை கால் டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து ஆரஞ்சு சாறை ஊற்றி நன்கு மென்மையாகப் பிசைந்து ஈரத்துணி போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். தோசைக்கல்லில் கனமான சப்பாத்தியாகத் திரட்டி சுற்றிலும் நெய் விட்டுப் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து நிவேதிக்கவும்.

ராகவேந்திரர்

கடலைப்பருப்புப் பாயாசம்.:-

தேவையானவை:- கடலைப்பருப்பு – அரை கப், திக் தேங்காப் பால் – அரை கப், வெல்லம் – முக்கால் கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 6

செய்முறை:- கடலைப்பருப்பைக் குக்கரில் வேகவைத்து லேசாக மசிக்கவும். வெல்லத்தை அரை கப் வெந்நீரில் கரைத்து வடிகட்டி வெந்த கடலைப்பருப்பில் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்துப் போட்டு ஏலத்தூள் தூவி இறக்கி நிவேதிக்கவும்.


பரிமள ப்ரசாதம். :-

தேவையானவை:- கோதுமை மாவு – 1 கப், நெய் – 1 கப், பால் – 2 கப், சர்க்கரை – 3 கப், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 20, கேசரித்தூள் – 1 சிட்டிகை, ஏலத்தூள் – 1 சிட்டிகை

செய்முறை:- கோதுமை மாவில் நெய் பால் சர்க்கரை முந்திரி கிஸ்மிஸ், கேசரித்தூள் ஏலத்தூள் சேர்த்துக் கரைத்து கனமான கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கிளறவும். பத்து நிமிடங்களில் பக்கங்களில் பூத்து வரும்போது நெய் தடவிய ட்ரேயில் கொட்டி துண்டுகள் செய்து ஆறியதும் எடுத்து நிவேதிக்கவும்.

டிஸ்கி:- இந்த நிவேதனங்கள் ம்பர் 17 , 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...