பலகாரம் பதினொண்ணு
1. இலை அடை :-
****************************
http://
தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 2
பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப் ( விருப்பப்பட்டால்)
செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும். ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும். அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும். விருப்பப்பட்டால் பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும். ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும். ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும். இதற்குத் தொட்டுக் கொள்ள கதம்பச் சட்னி நன்றாக இருக்கும்.
2. வெஜிடபிள் தூள் பஜ்ஜி:-
***************************************
http://
தூள் பஜ்ஜி:-
தேவையானவை :-
கடலை மாவு - 100 கிராம்.
மைதா - 20 கிராம்
சோளமாவு - 20 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க..
கலவைக் காய்கள் - 1 கப் (மெல்லிய குச்சிகள்) ( கத்திரி., வாழை., உருளை இங்கு உபயோகித்து இருக்கோம்) விரும்பினால்.. வெண்டை., காரட் ., பீன்ஸ் சேர்க்கலாம்..
செய்முறை :-
கடலை மாவு., மைதா., சோள மாவு ., உப்பு ., பெருங்காயப் பொடி., மிளகாய்த்தூள்., ரெட் ஃபுட் கலர்., கலவைக் காய்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிசையவும்.. தண்ணீர் விட வேண்டாம்.. காய்களில் உள்ள தண்ணீர்ச் சத்தே போதும். பானில் எண்ணெயைக் காயவைத்து ஒரு கை நிறைய மாவை எடுத்து உதிர்த்தது போல் தூவிவிடவும்.. நன்கு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து சாஸ்கள் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.
3. கல்கண்டு வடை :-
*******************************
http://
தேவையானவை:-
உளுந்து - 1 கப்
கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க..
செய்முறை :-
உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு. திருமணங்கள்., தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.
4. பீட்ரூட் வடை:-
**************************
http://
தேவையானவை :-
பீட்ரூட் - 2 ( தோல் சீவி துருவியது).
துவரம் பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது.
வரமிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் துண்டு
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு.
செய்முறை:-
துவரம்பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து வரமிளகாய்., சோம்பு., தேங்காய்., கருவேப்பிலையுடன் கொரகொரப்பாக அரைக்கவும். பீட்ரூட் துருவல்., வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். சூடாக மாலை டீயுடன் பரிமாறவும்.
5. ப்ரெட் வெஜ் உப்புமா:-
***********************************
http://
தேவையானவை :-
ப்ரெட் - அரை லோஃப்
காய்கறிக் கலவை ( காரட்., பீன்ஸ்., காலிஃப்ளவர்., பட்டாணி ) - 1 கப் பொடியாக அரிந்தது.
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
அமுல் பட்டர் - 1 காலப் ( குழிக்கரண்டி)
மிளகு ஜீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்.
செய்முறை:-
ப்ரெட்டை உதிர்த்து வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்த பின் உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் காய்கறிக் கலவையை கொட்டி வதக்கவும். பின் ப்ரெட் துண்டுகளைப் போட்டு அமுல் பட்டரும்., மிளகு ஜீரகப் பொடியும் போட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வதக்கவும். சூடாக மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாடோ சில்லி சாஸுடன் பரிமாறவும். இது மாலை நேரங்களில் பரிமாற ஏற்றது.
6. ரங்கோன் புட்டு:-
****************************
http://
தேவையானவை :-
வெள்ளை ரவை - 1 கப்
பால் - 2 கப் ஜீனி - 1 கப்
நெய் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் - 2
முந்திரிப் பருப்பு - 10
செய்முறை:-
ஒரு பானில் நெய்யை ஊற்றி சூடாக்கி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு வெதுப்பி சூடான பாலை ஊற்றி சமைக்கவும். ரவை வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகையும்., ஜீனியும் சேர்க்கவும். ஜீனி கரைந்தவுடன் அதில் தேங்காயை சேர்க்கவும். நன்கு இறுகி பக்கங்களில் நெய் பிரியும் போது பொடித்த ஏலக்காயை சேர்த்து சூடாக மாலை டிஃபனோடு பரிமாறவும்.
7. கும்மாயம்/ஆடிக்கூழ்:-
*************************
http://
தேவையானவை:-
கும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.
கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்
நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.
தண்ணீர் - 4 கப்
செய்முறை:-
பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.
8. பாதாம் ஹல்வா;-
******************************
http://
தேவையானவை:-
பாதாம் பருப்பு - 100 கி
ஜீனி - 200 கி
நெய் - 200 கி
பால் - 1 கரண்டி
குங்குமப்பூ - சிறிது.
பெல் ப்ராண்ட் யெல்லோ ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
செய்முறை :-
பாதாம் பருப்புக்களை 2 மணி நேரம் கொதிநீரில் ஊறவைத்து தோலுரிக்கவும். சிறிது பால் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பானில் அரைத்த பாதாம் ., ஜீனி போட்டு மிதமான தீயில் கிளறவும். அல்வா சட்டியில் ஒட்டாமல் கரண்டியில் திரண்டு ஒட்டிக் கொள்ளும் போது அடுப்பை அணைத்து பானை கீழே இறக்கி வைக்கவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கை விடாமல் கிளறவும். மொத்த நெய்யும் உறிஞ்சப்பட்டபின் தொட்டால் கையில் அல்வா ஒட்டாது. குங்குமப்பூவை போட்டு சூடாக அல்வாவை பரிமாறவும்.
9. சீப்புச்சீடைக்காய்:-
********************************
http://
தேவையானவை:- பச்சரிசி - 4 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
தேங்காய் - 1 முழுதாக
உப்பு - 3 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க ( 350 கிராம்)
செய்முறை:-
பச்சரிசியைச் சிறி்து நேரம் ஊறவைத்து வடிகட்டியில் போட்டு பின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். வெறும் வாணலியில் போட்டு மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையையும் பொடித்துச் சலிக்கவும். தேங்காயைத் துருவி அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். சூடாகும்போது உப்பு போட்டு இறக்கவும். திரிந்தது போல் இருக்கும். இது வெதுவெதுப்பாக இருக்கும்போது அரிசி., பொட்டுக்கடலை மாவில் ஊற்றிப் பிசையவும். சீப்புச்சீடைக்கட்டையில் உருண்டையாக் உருட்டிப்போட்டு மாவைப் பேப்பரில் பிழியவும். அதை 3 இன்ச் துண்டுகளாக வெட்டி இரண்டு நுனிகளையும் விரலில் சுற்றி ஒட்டவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும். சூடாக மாலைப் பலகாரமாகப் பரிமாறவும்.
10. கந்தரப்பம்.:-
**************************
http://
தேவையானவை:-
பச்சரிசி - 2 கப்
புழுங்கல் அரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/8 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வெல்லம் - 2 கப்
தேங்காய் துருவியது - 1 கப்
ஏலக்காய் - 4 .
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:-
பச்சரிசி.,புழுங்கல் அரிசி., உளுந்தம்பருப்பு., கடலைப்பருப்பு., வெந்தயம் எல்லாவற்றையும் கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். நைசாக அரைத்து அதில் வெல்லம்., தேங்காய்துருவல்., ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு. மாவை நன்கு அடித்து ஊற்றினால் நன்றாக வரும்..
11. காரட் ஹல்வா:-
****************************
http://
தேவையானவை:-
காரட் - 250 கி
ஜீனி - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1/4 கப் அல்லது மில்க் மெயிட் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை:-
காரட்டுக்களைத் தோல்சீவி கழுவி துருவவும். தவாவில் நெய்யைக் காயவைத்து முந்திரியைப் பொன்னிறமாகும்படி வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் காரட்டை 3 நிமிடம் வதக்கவும். நிறம் மாறும்போது பால் அல்லது மில்க்மெயிடைச் சேர்க்கவும். நன்கு கிளறி மூடிபோட்டு 2 நிமிடம் வேகவிடவும். காரட் மென்மையானதும் சீனியை சேர்த்து 10 நிமிடம் நன்கு கிளறி ஓரங்களில் நெய் பிரியும்போது இறக்கி பவுலில் மாற்றவும். சூடான அல்வாவை வெனிலா ஐஸ்க்ரீமோடு பரிமாறவும்.
டிஸ்கி 1. :- இந்தப் பலகாரம் பதினொன்னும் ஃபிப்ரவரி 2012 இவள்புதியவளில் வெளிவந்தது.
அருமையான ரெசிப்பிகள்..பகிர்வுகளுக்கு இனிய நன்றிகள்.
பதிலளிநீக்குThanks Raji. :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!